சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா?

சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-22 19:34 GMT

பெருகும் வாகனங்கள்... அதிகரிக்கும் விபத்துகள்

நாட்டில் பெருகி வரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி செல்வது விபத்துகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைகிறது. சாலை விபத்துகளால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோய் வருகிறது. உடல் உறுப்புகளை இழந்து பலர் பரிதவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அபராத தொகையை பல மடங்கு அதிகரித்து மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.

அபராத தொகை உயர்வு

தற்போது மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகை 10 மடங்கு அதிகரித்து ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.1,000, செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிச்சென்றால் ரூ.1,000, இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.2,000, நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால் ரூ.500 என்று அபராத தொகை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வரும் வேளையில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களுக்கும் அபராதம், ஆம்புலன்சுகளுக்கு வழி விடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என புதிய நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை கதிகலங்க வைத்துள்ள இந்த புதிய அபராத நடைமுறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது புதிய அபராத தொகையை 'இ-சலான்' கருவியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

குடும்பத்தை நினைத்து ஹெல்மெட் அணிய வேண்டும்

பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் வாகன விபத்துகள் குறையுமா? இந்தியாவிலேயே சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றிய மக்கள் பார்வை வருமாறு:-

பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன்:- பெரம்பலூரில் நகர் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. பெரும்பாலானோர் சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டபோதும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டபோதும் அவர்கள் மீண்டும் விதிமுறைகளை மீறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தற்போது போக்குவரத்து வீதியை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் இறப்பதற்கு காரணம் அவர்கள் ஹெல்மெட் அணியாததுதான். ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர்கள் உயிரை காப்பாற்றி விடலாம்.

அபராத தொகைக்கு பயந்து ஹெல்மெட் அணிவதை விட நம்மை நம்பி நமது குடும்பம் இருக்கிறது என்று நினைத்து இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். மது போதையில் வாகனங்களை ஓட்டாதீர்கள். உங்களால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது. ஓட்டினால் அவர்கள் பெற்றோர் மீதும் வழக்கு தொடரப்படும். எனவே வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து விபத்தில்லா பெரம்பலூராக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சாலைகளையும் சீரமைக்க வேண்டும்

பூலாம்பாடியை சேர்ந்த அரசு வாகன டிரைவர் சடையன்:-

போக்குவரத்து வீதியை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இனிமேல் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவார்கள் என்று நம்புகிறேன். இதனால் சாலை விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளாலும் விபத்துகள் அரங்கேறி வருகிறது. அதனையும் அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

எளம்பலூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்:- அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் விபத்து குறையாது. அபராத தொகை விதிக்கும்போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளும் இடைய வாக்குவாதம்தான் ஏற்படும். அனைவரும் வாகனத்தை சரியாக ஓட்டினாலே விபத்து ஏற்படாது. சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அனைவரும் கடைபிடிக்க தொடங்கி விடுவார்கள்.

அபராதத்துடன் கூடுதல் கட்டுப்பாடுகள்

அரியலூர் மாவட்டம், பெரியதிருக்கோணம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ராதா:- போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராத தொகையை உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் ஓட்டுபவர்கள், சிறுவர்கள், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் போன்றவர்களால்தான் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அவர்களுக்கு அபராத தொகையுடன், மேலும் கூடுதலாக கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும்.

விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த பட்டதாரி பெண் கமலா:- போக்குவரத்து விதிகளை மீறுவோறுக்கான அபராத தொகையை உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஏனெனில் பெருகிவரும் வாகனங்களால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் போக்குவரத்து விதிகளை பெரும்பான்மையான வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல், மற்றவர்களையும் விபத்தில் சிக்க வைக்காத வகையில் போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்