பாசன வாய்க்கால் கரை சீரமைக்கப்படுமா?

பாசன வாய்க்கால் கரை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-07 20:35 GMT

தஞ்சை அருகே 8-ம்நம்பர் கரம்பையில் பாசன வாய்க்கால் கரை சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பாசன வாய்க்கால்

தஞ்சை அருகே 8-ம் நம்பர் கரம்பை பகுதியில் 7-ம் நம்பர் சக்கரா வாய்க்கால் ஓடுகிறது. இந்த வாய்க்கால் சிவகாமிபுரம், 8.கரம்பை, சீராளூர் வரை பாசன வாய்க்காலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாசன வாய்க்காலை நம்பி இப்பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறுவை, சம்பா, தாளடி என்று விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பாசன வாய்க்கால் கரை வழியேதான் செல்ல வேண்டும். ஆனால் இந்த கரையை அதிகாரிகள் சரியான முறையில் பராமரிக்காமலும், தார் சாலையாக மாற்றம் செய்யாமலும் உள்ளனர்.

சகதியில் சிக்கும் டிராக்டர்கள்

இதனால் தற்போது இந்த சாலையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த கரை வழியேதான் அறுவடை எந்திரங்கள், வாகனங்களில் உர மூட்டைகள், டிராக்டர்கள் செல்ல வேண்டும்.

ஆனால் கரை மிகவும் மோசமான நிலையில் குண்டும்- குழியுமாக உள்ளது. இந்த வழியாக டிராக்டர்கள் சென்றால் சகதியில் சிக்கிக் கொள்கிறது.

சீரமைக்க கோரிக்கை

தற்போது ஒரு போக சம்பா, தாளடி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவால் இலைக்கருகல் உள்ளிட்ட பயிர்களை தாக்கும் நோய்களில் இருந்து காப்பாற்ற பூச்சி மருந்து, களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் அடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சுமார் 2 கி.மீட்டர் தூரம் வரை உள்ள இந்த பாசன வாய்க்கால் கரையை பொதுப்பணி துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தரமான சாலையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்