அலாரம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?

கும்பகோணம் உழவர் சந்தையில் உள்ள 65 ஆண்டுகள் பழமையான அலாரம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-17 20:14 GMT

கும்பகோணம் உழவர் சந்தையில் உள்ள 65 ஆண்டுகள் பழமையான அலாரம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புராதன கோவில்கள்

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு ஆகிய 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. கும்பகோணத்தை சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், புராதன கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள் உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் உள்ளது. கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அலாரம் வசதி

இவர்களின் வசதிக்காக கும்பகோணத்தில் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு பழைய பஸ் நிலையம் பகுதியில், அதாவது தற்போது உழவர் சந்தை அமைந்துள்ள இடத்தில் சுமாா் 50 அடி உயரத்தில் அலாரம் வசதியுடன் கூடிய இரும்பிலான டவர் அமைக்கப்பட்டது. அந்த அலாரம் மற்றும் டவர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மழை மற்றும் வெயிலினால் பாதிக்காத வகையில் அப்படியே உள்ளது. வயல் வேலை மற்றும் இதர வேலைகளுக்கு செல்பவர்களுக்காக காலை 6 மணி, 9 மணி மதியம் 1 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி என ஒலித்தது. வேலைக்கு சென்றவர்களும் அலாரம் எழுப்பும் ஒலியை கொண்டு வேலை செய்யும் நேரத்தை கணக்கீட்டு சென்று வந்தனர்.

இந்த அலாரமானது கும்பகோணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் காலை நேரத்தில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மதிய நேரத்திற்கு சுமார் 5 முதல் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒலி கேட்கும்.

காட்சி பொருளாக உள்ளது

இந்த அலார சத்தத்தை வைத்து அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுவந்தனர். தற்போது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அலாரம் செயல்படாமல் காட்சிபொருளாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் போதுமான பராமரிப்பு செய்யாததால், தற்போது வெறும் அலாரம் ஒலி எழுப்பும் எந்திரம் மட்டும் உள்ளது. அலாரம் எழுப்பும் எந்திரம் மேற்கூரை பெயர்க்கப்பட்டு வெறும் கம்பிகள் மட்டும் உள்ளது. தற்போது இந்த அலாரம் காட்சி பொருளாக இருப்பதோடு உழவர் சந்தைக்கு விலை பட்டியல் பலகைக்கு தூணாக அமைந்திருப்பது வேதனையான விஷயமாகும்.

எனவே கும்பகோணம் உழவர் சந்தையில் செயல்படாமல் காட்சி பொருளாக இருக்கும் அலாரத்தை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்