ஓடம்போக்கி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

திருவாரூர் ஒடம்போக்கி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-02 18:45 GMT

கொரடாச்சேரி:

திருவாரூர் ஒடம்போக்கி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஓடம்போக்கி ஆறு

திருவாரூரில் நகரின் மையமாக ஓடம்போக்கி ஆறு செல்கிறது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் ஓடம் போக்குவரத்து இருந்ததால் இதனை ஓடம்போக்கி ஆறு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆற்றின் மூலம் திருவாரூர் நகரம், விளமல், வன்மீகபுரம், தியானபுரம், சாப்பாவூர், கடாரம்கொண்டான், அலிவலம், கீவளூர் ஆகிய இடங்களில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தமாரை

இந்த நிலையில் தற்போது இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து தண்ணீரே தெரியாதப்படி வளர்த்துள்ளன. இதனால் வயல்களுக்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் நகர்ப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்த ஆற்றில் கலந்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் தண்ணீர் மாசடைந்த கருமை நிறமாக காட்சியளிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

அகற்ற வேண்டும்

ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் ஆற்றில் குளிக்கும் பொதுமக்களுக்கு தோல் நோய்கள் ஏற்படுகிறது. இதனால் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றியும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

விளைநிலங்களுக்கு பாசன வசதி

இதுகுறித்து மருதம்பட்டினத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறுகையில்,திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றின் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளதால் வயல்களுக்கு தண்ணீர் செல்லும் பாதையில் தடை ஏற்படுகிறது.

மேலும் மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் செல்லமுடியாமல் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. வயல்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற முடியாமல் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடம்போக்கி ஆற்றில் புதர் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தூர்வார நடவடிக்கை

திருப்பள்ளிமுக்கூடலை சேர்ந்த விவசாயி முருகையன் கூறுகையில்,

திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் ஆற்றில் மணல் மேடுகளும், நாணல், ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

இந்த ஆறு நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்குகிறது. ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் பொதுமக்கள் குளிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஓடம்போக்கி ஆற்றில் வளர்ந்துள்ள நாணல் செடிகள், ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்