ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என ேகாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-17 19:08 GMT

தேசிய அளவில் பொது வினியோக திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என மத்திய அரசின் பாராட்டை பெற்றது தமிழகம். இங்கு தான் நல்ல கட்டமைப்புடன் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் மாற்று கருத்து எதுவும் இருக்க முடியாது.

ரேஷன் கடைகள்

ெகாரோனா பாதிப்புக்கு பிறகு மத்திய, மாநில அரசுகள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு கூடுதலாக அரிசி வினியோகம் செய்து வருகிறது. 3 நபர்கள் இருந்தால் அந்த குடும்பத்தினருக்கு மாதத்திற்கு 30 கிலோ அரிசியும், ஒரு நபருக்கு 12 கிலோ அரிசியும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகிப்படுகிறது.

இந்த ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பல்வேறு கட்டுப்பாட்டுகளை அரசு விதித்துள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் வினியோக நடைமுறைகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் கடைகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகிக்கப்படுகிறதா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல பகுதிகளில் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் எங்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என புகார் கூறும் நிலையும் உள்ளது. மாதந்தோறும் மாவட்ட நிர்வாகம் பொது வினியோக குறைதீர்க்கும் நாள் நடத்தி இது தொடர்பான பொது மக்களின் புகார்கள் மீது நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

160 டன் அரிசி கடத்தல்

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 352 அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. இது தவிர அந்தியோதயா ரேஷன் கார்டுகள் 4,776 உள்ளது. மேலும் முதியோர் கார்டுகளும், போலீஸ் கார்டுகளும் உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வரும் நிலை உள்ளது. கடந்த 6 மாதங்களில் மாவட்டத்தில் 160 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வருவாய்த்துறையினரும், அவ்வப்போது சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசாரும் ரேஷன் அரிசி கடத்தல் செய்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் நிலை தொடர்கிறது.

175 பேர் கைது

6 மாதங்களில் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் 130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அரிசி கடத்தல் பரவலாக நடந்து வருவதை முற்றிலுமாக தடுக்க இயலாத நிலையே நீடிக்கிறது.

பல சந்தர்ப்பங்களில் ரேஷன் அரிசி கடத்துவோர் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி சேகரிப்பதாக கூறினாலும், ரேஷன் கடைகளில் இருந்தும் வெளிச்சந்தைக்கு அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் முறைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை தீவிரம்

விருதுநகரை சேர்ந்த காளிதாஸ்:-

விருதுநகர் மாவட்டத்தில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு வகையில் ரேஷன் கார்டுதாரர்களும் காரணமாக இருக்கலாம். ஆனாலும் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகமும், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் இன்னும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மத்திய, மாநில அரசுகள் பொதுமக்கள் நலன் கருதி அரிசி கொடுத்து வரும் நிலையில் அதனை கடத்தல்காரர்கள் கையில் ஒப்படைப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. எனவே கடத்தலை முற்றிலுமாக தடுக்க அனைவரும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தொடர் கண்காணிப்பு

கான்சாபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமச்சந்திரன்:-

தமிழகத்தில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியின்றி எத்தனையோ ஏழை குடும்பங்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது ரேஷன் அரிசி கடத்தல் என்பது தொடர்கதையாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ரேஷன் அரிசி கடத்தலில் சில நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவதை தடு்க்க வேண்டும். தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதுடன், ஏழை எளியவர்களுக்கு ரேஷன் அரிசி எளிதில் கிடைக்கவும் வழிவகுக்கும்.

கண்காணிப்பு கேமரா

நாரணாபுரத்தை சேர்ந்த போத்திசீனிவாசன்:- ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஒரு சிலருக்கு மொத்தமாக ரேஷன் கடைகளில் 50 கிலோ வரை தற்போது வழங்கப்பட்டு வருவதால் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்த வாய்ப்பு ஏற்படுகிறது.

கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பல கிராமங்களில் போதிய அரிசி கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் நிலையில் சில இடங்களில் மூடை, மூடையாக ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கூடுதல் அதிகாரம்

திருத்தங்கல் மைக்கேல்:- ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி செல்பவர்களை கண்காணித்து அவர்கள் விதிமீறி வாங்கி சென்றாலோ, கடத்தலுக்காக பதுக்கி வைத்தாலோ அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேவையான கூடுதல் அதிகாரங்களை போலீசாருக்கு வழங்க வேண்டும்.

சிவகாசி பகுதியில் பல ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு இருக்கிறது. இதை சரி செய்ய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல்காரர்கள் அரிசி கடத்தலை தொடர்ந்துசெய்து வருகிறார்கள். போலீசாரின் நடவடிக்கை மூலமே அரிசி கடத்தலை தடுக்கமுடியும்.

இரவார்பட்டி அங்குதுரை ராஜபாண்டியன்:- ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பொருடகள் தரமான முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சிலர் செய்யும் தவறினால் பாமர மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களை தவிர மற்றவர்களை அனுமதிக்க கூடாது. கடைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


அதிகாரம் இல்லை

மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்பிரிஜிட்மேரி:-

மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர சோதனைகள் நடத்தி ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலை கண்டறிந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகிறோம்.

ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகிறோம். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கடத்தல் தொடர்கிறது. தற்போதைய நிலையில் போலீசாருக்கு ரேஷன் கடைகளில் சென்று ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை. மேலும் நுகர்பொருள் வாணிபக்கழகத்திலும் இருப்புகளை ஆய்வு செய்யலாமே தவிர அவர்கள் புகார் தந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும். எனினும் விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். பொதுமக்களும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு ஒத்துழைப்பு தராமல் கடத்துவோர் பற்றி தகவல் தெரிவித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்