சாராய விற்பனையை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படுமா ?
நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாராயம் விற்பனை
நாகை மாவட்டத்தில் வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கண்காணித்து, மது குற்றங்களை தடுக்க மாவட்டத்தில் 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளதால் அங்கிருந்து சாராயம் கடத்தப்பட்டு நாகை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இதுதொடர்பாக வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் மனு அளித்து செல்கின்றனர். அந்த மனுக்கள் வெறும் காகிதங்களாகவே இருக்கின்றதே தவிர, முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே நாகை மாவட்டத்தில் வெளி மாநில சாராய விற்பனையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பெருங்கடம்பனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாராய விற்பனையை நிரந்தரமாக தடுக்கக்கோரி மனு கொடுத்துவிட்டு சென்றனர்.
சாராயத்துக்கு அடிமை
இதுகுறித்து நாகை அருகே பெருங்கடம்பனூரை சேர்ந்த தமிழ்ச்செல்வி கூறுகையில், பெருங்கடம்பனூர், வைரவனிருப்பு, இளங்கடம்பூர், கீழவெளி, மேலவெளி, வங்காரமாவடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாராயம் குடித்துவிட்டு வரும் ஆண்களால், ஒவ்வொரு குடும்பத்திலும் நாள்தோறும் பிரச்சினைகளாகவே இருந்து வருகிறது. எனது கணவர் சாராயத்துக்கு அடிமையாகி சரியாக சாப்பிட முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
என்னைப்போல ஏராளமான பெண்கள் கணவனை இழந்து விதவைகளாக வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகளைப்படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் சாராய விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி பலமுறை போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே பெருங்கடம்பனூர் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
கடுமையான நடவடிக்கை
திருமருகல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மணிமாறன் கூறுகையில், திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சாராயம் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் வகையில் போலீசார் சாராயம் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனாலும் சாராய விற்பனை நடைபெறுவதால் பல ஏழை எளிய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சாராய விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.