கரந்தமலை அய்யனார் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?
திண்டுக்கல் அருகே உள்ள கரந்தமலை அய்யனார் அருவி சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
'மலைகளின் இளவரசி' கொடைக்கானலுக்கு நிகராக ஓங்கி உயர்ந்த மலைகள் நத்தம் தாலுகா மணக்காட்டூரை அடுத்த கரந்தமலையில் உள்ளது. இங்குள்ள மலைகளில் பசுமை போர்வையை போர்த்தியது போல் அடர்ந்து வளர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் ஏராளமாக உள்ளன. மேலும் கரந்தமலைக்கு செல்லும் வழியில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் மூலவராக பூரணவள்ளி தேவி, சுந்தரவள்ளி தேவி, சமேதராய் அய்யனார் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியை அய்யனார் நீர்வீழ்ச்சி என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. அதோடு இங்குள்ள வனப்பகுதியில் காட்டெருமைகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மூலிகைகள் கலந்து வரும் அய்யனார் நீர் வீழ்ச்சியில் குளியல் போட தவறுவதில்லை.
நடை பயணமாக...
திண்டுக்கல்லில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் கரந்தமலை அமைந்துள்ளது. திண்டுக்கல்லில் இருந்து மணக்காட்டூர் பிரிவுக்கு சென்று அங்கிருந்து கரந்தமலைக்கு செல்ல வேண்டும். மணக்காட்டூர் பிரிவில் இருந்து கரந்தமலைக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் நடைபயணமாக வனப்பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரம் சென்றால் அய்யனார் கோவிலை அடையலாம்.
அங்கு அய்யனாரை வழிபட்டுவிட்டு நீர்வீழ்ச்சிக்கு குளியல் போட பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்வார்கள். பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை நாட்களில் மாணவர்கள் கூட்டமும் இந்த நீர்வீழ்ச்சியில் அலைமோதும். இயற்கை அன்னையின் அரவணைப்பில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி குறித்து கேள்விப்பட்டு இங்கு குளியல் போட வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு இல்லை
ஆனால் அவர்கள் அய்யனார் கோவில், நீர்வீழ்ச்சிக்கு வரும் பாதை அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. பாதை கரடு முரடாக இருப்பதால் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். சிலர் இரு சக்கர வாகனங்களில் கோவில் வரை வந்து பின்னர் அங்கிருந்து நீர்வீழ்ச்சிக்கு நடந்து செல்கின்றனர். தங்கும் விடுதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் காலையில் சென்று மாலைக்குள் கரந்தமலையைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் சுற்றுலா பயணிகளுக்கு உள்ளது. இதனால் இயற்கை அன்னையின் அழகை முழுமையாக ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்லும் அவல நிலையே தற்போது வரை உள்ளது.
இதற்கு காரணம் கரந்தமலை பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்படாததே. பிரசித்தி பெற்ற கோவில், ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சி என சுற்றுலா தலங்களுக்கான அனைத்து அம்சங்களும் இங்கு இருந்தாலும் சுற்றுலா தலம் என்ற அந்தஸ்து தற்போது வரை கிடைக்கவில்லை.
வனத்துறை அனுமதி
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
ராஜேஸ்வரி (ஊராட்சி தலைவி, குடகிபட்டி):- 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் அழகர்சாமி ஊராட்சி தலைவராக இருந்தார். அப்போதே கரந்தமலை அய்யனார் நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றனர். ஆனால் இதுவரை அய்யனார் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாறவில்லை.
நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சில இடங்கள் மட்டுமே பட்டா நிலமாக உள்ளது. மற்ற இடங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே வனத்துறை அனுமதி இல்லாமல் சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய முடியாது. வனத்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்தால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்
சிவா (கூலித்தொழிலாளி, கரந்தமலை):- கொடைக்கானலில் உள்ள நீர்வீழ்ச்சிகளை போல் அய்யனார் நீர்வீழ்ச்சியையும் பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால் அவர்கள் இங்கு வருவதற்கு பல்வேறு சிரமங்களை அனுபவிக்க வேண்டி உள்ளது. அய்யனார் நீழ்வீழ்ச்சி பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்பட்டால் அந்த சிரமங்கள் இருக்காது.
அய்யனார் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலர் மதுபானம் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து அப்பகுதியில் வீசிச்செல்கின்றனர். உடைந்து சிதறிக்கிடக்கும் கண்ணாடி துண்டுகள் அப்பகுதிக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் கால்களை பதம் பார்த்துவிடுகிறது. மேலும் வனவிலங்குகளுக்கும் அவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. இதையறிந்த வனத்துறையினர் தற்போது அய்யனார் நீர்வீழ்ச்சிக்கு வருபவர்களை சோதனை செய்த பின்னரே நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.
இதனால் தற்போது மதுபாட்டில்கள் வீசப்படுவது குறைந்துள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பைகள், கேன்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு பிளாஸ்டிக் பொருட்களை வீசிச்செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
சபரிசன் (விவசாயி, சிறுகுடி) :- கரந்தமலை வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக விடுவோம். அவைகள் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்லும் போது சுற்றுலா பயணிகள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை தின்றுவிடுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை வீசிச்செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
வடிவேல் (ஓட்டல் ஊழியர், நத்தம்):- கரந்தமலை அய்யனார் நீழ்வீழ்ச்சி பகுதி சுற்றுலா தலமாக மாற்றப்பட்டால் கொடைக்கானலை போல் இங்கும் ஓட்டல் தொழிலை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். அதன் மூலம் கரந்தமலை பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.