மாவட்டத்தில் வன உயிரினங்களுக்கான வாழ்விடம் அமைக்கப்படுமா?

மாவட்டத்தில் வன உயிரினங்கள் வசிக்க வாழ்விடம் அமைக்கப்படுமா? என வன ஆர்வலர்கள், விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-01-18 18:12 GMT

வன உயிரினங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வன உயிரினங்கள் வசிக்க ஏற்ற இடங்கள் இல்லாததால் வடகாடு மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களில் பறவைகள் மற்றும் விலங்குகள் தஞ்சம் அடைந்து வருகின்றன.

மாவட்டத்தில் வன உயிரினங்களுக்கு என உரிய காடுகள் இல்லாததால் வடகாடு மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் உணவு மற்றும் இரையை தேடி வரும் பறவைகள் மற்றும் விலங்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தைல மரக்காடுகளாக காட்சி...

ஒரு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வளமாக இருந்த அரசு வனக்காடுகள் மற்றும் பழக்காடுகளில் வசித்து வந்த உயிரினங்களான மான், நரி, குரங்கு, காட்டுப்பூனை, முள்ளம் பன்றி, தேவாங்கு, காட்டெருமை, மயில், கொக்கு, காடை, கவுதாரி, வவ்வால், புறா என இவை அனைத்தும் இப்பகுதிகளிலேயே தங்கி தங்களது வாழ்விடமாக வசித்து வந்தன. இந்தநிலையில் இப்பகுதிகளில் இருந்த பல்லுயிர் காடுகள் அனைத்தும் தற்போது தைல மரக்காடுகளாக, காட்சியளித்து வருகின்றன. மேலும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பழப்பண்ணை (வம்பன் முதல் வல்லத்திராகோட்டை வரை) என பெயரை பெற்ற பழப்பண்ணக்கு என 1303 ஏக்கர் இடப்பரப்பளவில் உள்ள இடம் தற்போது பொழிவிழந்து பெயரளவிற்கு மட்டுமே பழப்பண்ணை என அழைக்கப்படுகிறது. பழமும் காணோம் தோட்டமும் காணோம் என்ற கணக்கில் பெரும்பாலான இடங்கள் முட்புதர்கள் மண்டிய நிலையில் இருந்து வருகின்றன.

தானியங்கள் சேதம்

இப்பகுதிகளில் வசித்து வந்த பறவைகள் மற்றும் விலங்குகள் வசிக்க இடமின்றியும், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவற்றை தேடி கிராமப்புற பகுதிகளில் தஞ்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில் வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அதிக அளவில் இடம் பெயர்ந்து வருகின்றன.

இப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் தென்னை, நெல், வாழை, பலா, சோளம், கடலை உள்ளிட்டவை முற்போகமும் விவசாயிகள் மூலமாக விளைவிக்கப்பட்டு வருவதால் இப்பகுதிகளுக்கு வந்த வன உயிரினங்கள் இப்பகுதிகளில் வந்து தஞ்சமடைந்ததோடு இனப்பெருக்கம் செய்து கணிசமான முறையில் அவை பெருகி இப்பகுதிகளை புதிய வாழ்விடமாக மாற்றி கொண்டு உள்ளன. விவசாயிகளின் விளை நிலங்களில் விளையும் தானியங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு உணவு, தண்ணீரை தேடி சுற்றித்திரியும் இத்தகைய வன உயிரினங்களை பகலில் வேட்டை நாய்கள், இரவு நேரங்களில் வேட்டை நபர்கள் முதற்கொண்டு வேட்டையாடி வருவதாகவும் வன ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். மேலும் வன உயிரினங்கள் வெவ்வேறு விபத்துகளாலும் காயமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தேவையான நிதி

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் அரசு காடுகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் தைல மரங்களாகவே இருப்பதால் வன உயிரினங்களுக்கு தேவையான தண்ணீர், உணவு கிடைக்காத நிலையில் வன உயிரினங்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தைல மரகாடுகளால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பருவமழை கூட முறையாக பெய்வது இல்லை. இதனால் ஆண்டுகளுக்காண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதாகவும், பருவமழை பொய்த்து விடுவதால் ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் உள்ள தைல மரக்காடுகளுக்கு பதில் வன உயிரினங்கள் வாழ தகுந்த இடமாக இவற்றை மாற்றம் செய்ய தைல மரக்காடுகளை முற்றிலும் அகற்றிவிட்டு மாவட்டத்தில் வன உயிரின காடுகள் மற்றும் பழத்தோட்டங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், வன ஆர்வலர்களும் எதிர்பார்த்துள்ளனர். மேலும் அதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி சிறப்பு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து இவற்றை நிறைவேற்றும் பட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ்வதோடு சுற்றுச்சூழலுக்கும் உகந்த மாவட்டமாக இம்மாவட்டம் திகழும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்