ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் அகற்றப்படுமா?
கிருஷ்ணராயபுரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் அகற்றப்படுமா? என மாணவ-மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.
அரசு பள்ளி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளபாளையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தின் உறுதித் தன்மை மற்றும் மேற்கூரை (ஓடு) கீழே விழுந்து அபாயகரமான நிலையில் இருந்ததால் பழைய கட்டிடத்திற்கு அருகிலேயே பள்ளி வளாகத்திற்குள் புதிதாக பள்ளி வகுப்பறை கட்டப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
விபத்து ஏற்படும் அபாயம்
இதனால் சேதமடைந்துள்ள பழைய கட்டிடம் அப்புறப்படுத்தப்படாமல் தற்போது வரை கிடப்பிலேயே போட்டுள்ளதால் அந்தப் பகுதி அபாயகரமான பகுதியாக இருந்து வருகிறது. கட்டிடத்தின் உறுதித் தன்மை நாளுக்கு நாள் மிக மோசம் அடைந்து வருகிறது.இதனால் பள்ளி அருகிலேயே உள்ள குடியிருப்பு வாசிகள் அந்த வழியாக செல்லும்போது பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.
எதிர்பார்ப்பு
மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் விளையாடும்போது கவனக்குறைவாக பழைய கட்டிட பள்ளிக்குள் சென்று விளையாடினால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்டங்களில் பழைய கட்டிடங்களை பார்வையிட்ட கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி கரூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.