குடிநீர் தொட்டி, ரேஷன் கடை கட்டிடம் புதிதாக கட்டப்படுமா?

குடிநீர் தொட்டி, ரேஷன் கடை கட்டிடம் புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-04-03 20:30 GMT

கீழப்பழுவூர்:

கோரிக்கைகள்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோக்குடி கிராமத்தில் 400 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் நிரந்தர தபால் அலுவலகம் இல்லை. அவற்றை புதிதாக கட்டித்தர வேண்டும். கிராமமக்கள் சார்பில் கட்டப்பட்ட கடைகளை இடிக்கக்கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சுகாதாரமற்ற குடிநீர்

கோக்குடியை சேர்ந்த ஆரோக்கியமேரி:- இப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேற்கூரை இடிந்து உள்ளேயே விழுந்து விட்டது. இடிந்து விழுந்த சிமெண்டு பூச்சுகளை அப்புறப்படுத்தாமல், அந்த தொட்டியிலேயே தண்ணீர் நிரப்பப்பட்டு, இதுவரை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேற்கூரைக்கு பதிலாக ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் நீர்த்தேக்க தொட்டியின் மீது வைத்து, ஓரளவு மூடப்பட்டுள்ளது. இதனால் அதன் மீது பறவைகள் அமர்ந்து, தண்ணீரில் அசுத்தம் செய்கின்றன. இதனால் சுகாதாரமான குடிநீர் இல்லாமல், குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டு வருகிறது. மேலும் பலத்த காற்று வீசினால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது போக்கப்பட்டுள்ள ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த தொட்டியில் அருகில் மற்றும் அதனை சுற்றிமக்கள் வசித்து வருகின்றனர். எனவே அந்த தொட்டியை அகற்றி, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும்.

புதிய ரேஷன் கடை கட்டிடம்

இல்லத்தரசி அமலா:- இந்த கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் ஒரு வகுப்பறையில் ரேஷன் கடை நடத்தப்பட்டு வருகிறது. இது சரியானது அல்ல. முன்பு இருந்த ரேஷன் கடை ஊரின் நடுவே இருந்ததால், அனைவரும் சென்று பொருட்கள் வாங்கி வர ஏதுவாக இருந்தது. தற்போது பள்ளியில் ரேஷன் கடை நடைபெற்று வருவதால் ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் வெகு தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்கி வர வேண்டியது உள்ளது. எனவே அரசு உடனடி நடவடிக்கை எடுத்து புதிதாக ரேஷன் கடை கட்டி தர வேண்டும்.

தபால் நிலையம்

சவரிராஜ்:- 400 குடும்பக்களுக்கு மேல் வசிக்கும் எங்கள் கிராமத்திற்கு இதுவரை தபால் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டி தரப்படாமல் இருந்து வருகிறது. இதனால் திருமண மண்டபத்தின் மாடிப்படிகளின் கீழே கூண்டு போல் அமைக்கப்பட்டு, அதிலேயே தபால் நிலையம் இதுவரை செயல்பட்டு வருகிறது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு என்று புதிதாக தபால் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

கடைகளை இடிக்கக்கூடாது

லாட்டிமர் ஆரோக்கியராஜ்:- பொதுமக்களின் தேவைக்காகவும், கிராம மேம்பாட்டிற்காகவும் எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பணம் திரட்டி நான்கு கடைகள் கட்டி அதனை ஏலத்தில் விட்டு அதில் இருந்து வரும் வருவாயை கொண்டு கிராம மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தி வந்தோம். இதுவரை ஏரிக்கு நீர் வரத்து வரக்கூடிய ஓடையை தூர்வாரியதோடு, கிராமத்தில் நான்கு தெருக்களில் கண்காணிப்பு கேமரா அமைத்துள்ளோம். மேலும் ராஜீவ் காந்தி குடிநீர் திட்டத்திற்கு, பணம் செலுத்தி குடிநீர் பெற்றுள்ளோம். இதுபோன்று பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக அந்த வருவாயானது பயன்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த நான்கு கடைகளையும் இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எங்கள் கிராம மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு அந்த கடைகளை இடிப்பதை அரசு ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்