தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் நீர்நிலைகள்; விவசாயிகள்-முக்கிய பிரமுகர்கள் கருத்து

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நீர்நிலைகள் மாசுபடுவது குறித்து விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-23 21:17 GMT

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நீர்நிலைகள் மாசுபடுவது குறித்து விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தண்ணீரின் முக்கியத்துவம்

"நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்

வானின்றி அமையாது ஒழுக்கு"

என்று நீரின் முக்கியத்துவம் குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் கூறிஉள்ளார். தற்போது தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வருகிறோம். நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த பூமியில் 79 சதவீதம் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதில் 97.50 சதவீதம் கடல்நீர் ஆகும். மீதமுள்ள 2.5 சதவீதம் தான் நாம் குடிக்கக்கூடிய நன்னீராக உள்ளது. இதிலும் 3-ல் ஒரு பங்கு பனிக்கட்டியாகவே உள்ளன.

எனவே மிக குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. இதனால் நாம் பெரும்பாலும் மழையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, அதி வேகமாய் வளரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் தண்ணீரின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.

நீரை வீணாக்கக்கூடாது

மழை அளவு குறைந்துவிட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவே தான் தண்ணீர் சிக்கனமும், சேமிப்பும் இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமானதாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் கண்டிப்பாக வாழ முடியாது. இப்படிப்பட்ட நீரை நாம் ஒருபோதும் வீணாக்கக்கூடாது.

கடந்த 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் யாரும் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கியது கிடையாது. ஆற்றுநீர், கிணற்றுநீர், ஓடைநீர், அணைகளில் இருந்து விடப்படும் நீரை குடிநீராக பயன்படுத்தினோம். ஆனால் தற்போது ஆறு, குளம், குட்டை, அணை, ஆழ்துளை கிணறு, நிலத்தடி கிணறு போன்றவற்றின் தண்ணீரை நாம் அப்படியே பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொழிற்சாலைகள் தான். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலப்பதால் கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்விலைகள் மாசுபடுகிறது.

தொழிற்சாலை கழிவுநீர்

பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதால் தான் நம்மால் தண்ணீரை குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. தொழிற்சாலைகளின் வளர்ச்சி தேவைதான். அதே நேரத்தில் நம் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியம் மிக மிக முக்கியம் ஆகும். நாம் அனைவரும் பணம், பொருளை சேர்த்து வைப்பது நம்முடைய சந்ததியினருக்காகத்தான்.

ஒருபோதும் நாம் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்யக்கூடாது. உடல் உறுப்பு குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் நம்முடைய சந்ததியினர் பிறந்தால் அதற்கு நாம் தான் காரணம். எனவே அவர்கள் ஆரோக்கியமாக வாழ நம்மால் முயன்றவரை தண்ணீரை மாசுபடுத்தாமல் பாதுகாப்போம். இனியும் நாம் தண்ணீரை மாசுபடுத்தினால் 30 ஆண்டுகளுக்கு பின்னர் குடிக்கக்கூட நமக்கு தண்ணீர் கிடைப்பது சிரமம்தான்.

500-க்கும் மேற்பட்ட...

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 500-க்கும் மேற்பட்ட சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு முறையான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதா? என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

ஏனென்றால் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதே இதற்கு உதாரணம். சிப்காட் பகுதியில் மட்டும் 52 சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.

மாசுபாடு

இங்கு மட்டும் ஒரேஒரு பொதுசுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் வேறு எங்கும் பொது சுத்திகரிப்பு நிலையம் கிடையாது. சுத்திகரிப்பு நிலையம் அமைத்து முறையாக கழிவுநீரை சுத்திகரிப்பு செய்தால் அதற்கு அதிக அளவில் செலவு ஆகும்.

இதனால் தான் தொழிற்சாலைகளில் இருந்து இரவு நேரங்களில் நீர்நிலைகளில் கழிவுநீரை திறந்து விடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். தொழிற்சாலை கழிவுகளால் தற்போது கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால், குளம், குட்டை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மாசுபட்டுவிட்டதாகவும் ஈரோடு வாழ் மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

கடும் நடவடிக்கை

விவசாயி சுதந்திரராசு:-

தொழிற்சாலை கழிவுநீர் நீர் நிலைகளில் கலப்பதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுகிறது. கெமிக்கல் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், மண்ணில் கார, அமில தன்மை பாதிக்கப்பட்டு, பயிர் விளைச்சல் படிப்படியாக குறையும். ஒரு கட்டத்தில் அந்த இடம் உவர் நிலமாக மாறி பயிர் செய்ய முடியாத நிலைக்கு சென்று விடும்.

தொழிற்சாலை கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் அந்த தொழிற்சாலை 2, 3 வாரங்களிலேயே செயல்பட தொடங்கி விடுகிறது. மின் இணைப்பு துண்டிப்பு என்பது கண் துடைப்பு செயலாகவே உள்ளது. கழிவுநீரை ஒருமுறை நீர் நிலைகளில் வெளியேற்றினால் அந்த தொழிற்சாலை மீண்டும் செயல்பட முடியாதபடி அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தொழிற்சாலை கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பது தடுக்கப்படும்.

அதிகாரிகளின் அலட்சிய போக்கு

சமூக ஆர்வலர் நிலவன்:-

சமீப காலமாக தொழிற்சாலைகளின் கழிவுநீர் நீர்நிலைகளில் கலப்பது அதிகரித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகளின் மெத்தன போக்கே ஆகும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் வாங்கி அந்த பணிகள் இன்றுவரை நடைபெறாமல் உள்ளது. இதேபோல் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை கழிவுநீரை சுத்தம் செய்ய சூளை பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதுவும் தற்போது செயல்படாமல் உள்ளது.

காவிரி ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் அடை, அடையாக மிதக்கிறது. தண்ணீரை மாசு படுத்துவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு 2 மாதம் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. எதற்காக என்றால் அங்கு முறையாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும், மீண்டும் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றக்கூடாது என்பதற்காக ஆகும். ஆனால் ஆலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தாமல் மீண்டும் செயல்படுத்துகின்றனர். இதற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். எனவே 2-வது முறை தவறு செய்தால் சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு மொத்தமாக சீல் வைத்து செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது.

மலட்டுத்தன்மை

டாக்டர் சி.என்.ராஜா:-

தொழிற்சாலைகளில் அதிக அளவில் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தான் அதில் இருந்து வெளிவரும் கழிவுநீர் விஷத்தன்மையுடன் உள்ளது. அதை சுத்திகரிக்காமல் நீர்நிலைகளில் வெளியேற்றும்போது தான் தண்ணீர் மாசுபடுகிறது. அந்தநீரை குடிக்கும்போது தான் நமக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது. குறிப்பாக தோல் நோய், புற்றுநோய், சுவாசக்கோளாறு வர அதிக அளவில் சாத்தியம் உள்ளது.

ஏன் மலட்டுத்தன்மை ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள ஓடை, ஆறுகளில் தண்ணீர் குடிக்கவும், குளிக்கவும் உகந்ததாக இருந்தது. ஆனால் சுத்திகரிக்கப்படாமல் எந்த நீரையும் தற்போது நம்மால் குடிக்க முடியாது. அந்த அளவிற்கு நீர்நிலைகள் மாசுபட்டு விட்டது. எனவே நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்பது தனி மனிதனின் பொறுப்பு. அதை உணர்ந்து நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

என்ஜினீயரும், விவசாயியுமான

விக்கி என்கிற விக்னேஷ்:-

நான் கட்டிட பொறியியல் படித்து சிவயோகா பில்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தாலும் என் தாத்தா விட்டு சென்ற விவசாய நிலம் பாழ்படக்கூடாது என்ற நோக்கில் விவசாயத்தையும் கவனித்து வருகிறேன். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வள்ளுவர் கூறினார். ஆனால் உழுபவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? குண்டு ஊசி தயாரிப்பவர் கூட தன்னுடைய தயாரிப்பு பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் ஒரு விவசாயியால் அது முடியாது. அதையும் தாண்டி விவசாயம் பார்ப்பவர்களுக்கு பாசன தண்ணீரில் சாயக்கழிவு கலப்பது பெரும் வேதனையாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் பாசன வாய்க்காலாக இருப்பது காலிங்கராயன் வாய்க்கால். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு உயிர் நீர் தரும் இந்த வாய்க்காலின் இன்றைய நிலையை பார்த்தால் பாவமாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னால் அள்ளிக்குடித்த தண்ணீர் இப்போது சாயக்கழிவாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த நீரை பாய்ச்சிதான் பயிர் வளர்க்கிறோம். மின்சாரம் துண்டிப்பு, அபராதம் போன்ற தண்டனைகள் தண்ணீரில் சாயக்கழிவை கலப்பவர்களுக்கு போதாது. அவர்கள் மீது விவசாயத்தை அழிப்பதற்காக குற்ற வழக்கை பதிவு செய்யவேண்டும். அப்போதுதான் எஞ்சிய பாசன தண்ணீரை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்