பாழடைந்த நிலையில் இருக்கும் அங்கன்வாடி மையம்

திமிரியை அடுத்த குண்டலேரி கிராமத்தில் அங்கன்வாடி மையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-05 18:21 GMT

பாழடைந்த அங்கன்வாடி கட்டிடம்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டலேரி கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக கட்டிடத்தின் புகை போக்கி வழியாக மழை நீர் உள்ளே கசிந்து குழந்தைகள் அமர்ந்து படிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி வருகிறது.

குழந்தைகளுக்கு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து மாவு மழையில் நனைந்து உள்ளது. ஜன்னல்கள் அருகே புதர்கள் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துகள் அதிக அளவில் உலா வருவதாக கூறுகின்றனர்.

அடிப்படை வசதி இல்லை

இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. மின்சாரம் இல்லாமல் இருட்டில் குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அங்கன்வாடி மையத்தை சுற்றி புதர்கள் மண்டியிருப்பதால் விஷ ஜந்துகள் அங்கன்வாடி மையத்திற்குள் நுழைகின்றன.

இதுபற்றி பலமுறை பஞ்சாயத்து நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மின்சாரம் இல்லாமல் இருட்டில் தத்தளிக்கும் குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன்பே மாற்று இடம் வழங்கி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்