காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதி செய்து தரப்படுமா?

தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-10-02 18:44 GMT

காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 4½ ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி முறைகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது. கடந்த 2018-19-ம் கல்வியாண்டில் 381 மாணவ- மாணவிகள் படித்து வந்தனர்.

இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததால் தனியார் பள்ளி மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதனால் காரைக்குறிச்சி, தா.பழூர், மதனத்தூர், ஸ்ரீபுரந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்தனர்.

திறந்தவெளியில் வகுப்புகள்

இதனால் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 754 ஆக உயர்ந்தது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்மாதிரி பள்ளியாக இந்த பள்ளி கருதப்படுகிறது. ஆனால் இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

குறிப்பாக இங்கு 300 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் 15 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதன்காரணமாக மாடி படிக்கட்டுகள், வகுப்பறைகளுக்கு வெளியில் உள்ள வராண்டா ஆகிய பகுதிகளில் தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மொட்டை மாடியில் கொட்டகை அமைத்தும், திறந்தவெளியில் கொட்டகை அமைத்தும், மரத்தடியிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. போதிய அளவில் வகுப்பறைகள் இல்லாத நிலையில் மாணவர்களுக்கு கவனசிதறல் ஏற்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆய்வக வசதிகள்

மழைக்காலங்களில் திறந்தவெளி மற்றும் மரத்தடிகளில் அமர வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிகள் இந்த பள்ளியில் இல்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு சென்று செய்முறை தேர்வு எழுதுகின்றனர்.

போதிய ஆய்வுக்கூட பயிற்சி இல்லாமல் மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கு பெறும்போது மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளியில் நூலக வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவறை வசதிகள்

காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய கழிவறை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட கல்வி துறை அதிகாரிகள் இப்பள்ளியில் ஆய்வு நடத்தி பள்ளிக்கு போதிய அளவு கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், கழிவறை மற்றும் நூலக வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் நலன்கருதி இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய ஆய்வகங்களையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்