பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?

பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-01 19:30 GMT

அரசு கல்லூரி

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் இயங்கி வந்த பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரி காலை, மதியம் என 2 வேளை சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பெரம்பலூர் மாவட்டமின்றி, அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனர். ஆனால் இந்த கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று, அங்கு பயிலும் மாணவ-மாணவிகளால் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போதிய அளவு கல்லூரியில் இல்லை. குடிநீர் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கின்றனர். மேலும் இங்குள்ள கழிவறைகள் பழுதடைந்து காணப்படுகிறது. அதனை சரி செய்தும், கூடுதல் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

விளையாட்டு மைதானம்

கல்லூரியில் விளையாட்டு மைதானம் இருப்பதற்கான அடையாளமே இல்லை. அதில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. கல்லூரி விளையாட்டு விழாவின் போது மட்டும் தான் அந்த மைதானம் சீரமைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை விளையாட்டு மைதானத்தில் விட்டு மேய்த்து செல்கின்றனர்.

விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படாததால் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகள் கொடுக்கப்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளையாட்டின் மீதான ஆர்வமும் மாணவ-மாணவிகளிடையே குறைந்து வருகிறது. விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும்.

வேகத்தடை

கல்லூரியில் உள்ள நூலகத்தை விரிவுப்படுத்தி தர வேண்டும். கல்லூரி முன்பு சாலையின் இருபுறமும் பயணிகள் நிழற்குடை அமைத்தும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சாலை மாநில நெடுஞ்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டதால் கல்லூரி முன்பு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் கல்லூரியின் முன்பு உள்ள சாலையின் இருபுறமும் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும். தொலை தூர மாவட்டங்களில் இருந்து வந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுதி வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கல்லூரி தொடங்கும், முடியும் நேரத்தில் கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்