ஆழியாறு அணை பார்வை மாடம் திறக்கப்படுமா?

வால்பாறையில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள ஆழியாறு அணை பார்வை மாடம் திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-19 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள ஆழியாறு அணை பார்வை மாடம் திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குளிர் பனிக்காலம்

வால்பாறை பகுதிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய ஒரே காலம், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நிலவும் குளிர் பனிக்காலம்தான். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக குளிர் பனிக்காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.

கூழாங்கல் ஆறு

இங்கு முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்று பகுதியில் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் வருகை பெரிய அளவில் இல்லை. இதனால் கூழாங்கல் ஆற்று பகுதியின் சாலையோரத்தில் கடைகளை நடத்தும் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதற்கிடையில் தற்போது வால்பாறை பகுதியில் காலை முதல் மாலை 3 மணி வரை கடுமையாக வெயில் வாட்டினாலும், அதன் பிறகு கடுமையான குளிரும், இரவில் பனிமூட்டமும் நிலவுகிறது. இது வால்பாறை பகுதியில் குளுகுளு சீசன் தொடங்கி விட்டதை காட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சில காட்சிமுனை பார்வை மாடங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால், அவர்கள் ஏமாற்றமடையும் நிலை காணப்படுகிறது.

பார்வை மாடம்

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

வால்பாறை பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு, நீரார் அணை, சோலையாறு அணை, ஹார்ன்பிள் காட்சி முனை, நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை, கவர்க்கல் மாசிதுரை காட்சி முனை, நகராட்சி தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களை உரிய பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் வனத்துறையினர் முட்செடிகளை கொண்டு கடந்த ஓராண்டாக அடைத்து வைத்திருக்கும் 9-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள லோம்ஸ்வியு என்று அழைக்கப்படும் ஆழியாறு அணை காட்சி முனை பார்வை மாடத்தை சுற்றுலா பயணிகள் பார்வைக்காக திறந்து விடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்