கடைகள் அமைக்க மாற்று இடம் ஒதுக்கப்படுமா?
வால்பாறையில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளை அமைக்க மாற்று இடம் ஒதுக்கப்படுமா? என்று சாலையோர வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளை அமைக்க மாற்று இடம் ஒதுக்கப்படுமா? என்று சாலையோர வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
சாலை விரிவாக்கம்
வால்பாறை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளை அகலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் வால்பாறை நகரில் சிலர் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
இதற்கிடையில் விரிவாக்க பணிக்காக சாலையை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த கடைகளை அகற்றினர். ஆனால் மாற்று இடம் வழங்க நெடுஞ்சாலைத்துறையினரோ, நகராட்சி நிர்வாகத்தினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலையோரத்தில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஆங்காங்கே சிறு, சிறு கடைகளை போட்டு வியாபாரங்களை நடத்தி வருகின்றனர்.
மாற்று இடம்
இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறியதாவது:-
வால்பாறை நகரில் சாலையோர வியாபாரிகள் என்ற முறையில் பலரிடம் கடனுதவி பெற்று கடைகளை நடத்தி வந்தோம். தற்போது கடைகள் அகற்றப்பட்டு விட்டதால் எங்களது பொருளாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். மீண்டும் கடைகளை சாலையோரத்தில் அமைத்து மீண்டும் அதை அகற்றி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகிறோம்.
எனவே நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து வால்பாறை நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நாங்கள் கடைகளை நடத்தி கொள்ள இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.