நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களும் மீண்டும் இயக்கப்படுமா?
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் தலைஞாயிறு பகுதிக்கு நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களும் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வாய்மேடு:
தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் தலைஞாயிறு பகுதிக்கு நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களும் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பஸ்கள் நிறுத்தம்
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலத்தில் இருந்து தினந்தோறும் இரவில் சென்னைக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் அலுவலக விஷயமாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னை செல்வோர் இதனை பயன்படுத்தி வந்தனர்.இதனால் இந்த பஸ் சேவை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னை செல்லும் இந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இது குறித்து பல்வேறு புகார்களை கிளை அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். இதேபோல திருத்துறைப்பூண்டியில் இருந்து ஆய்மூர், வடுகூர், மணக்குடி வழியாக தலைஞாயிறு நாலுவேதபதிக்கு தினம்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு ஏதுவாகவும் பஸ் இயக்கப்பட்டு வந்தது.அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டியில் இருந்து வேட்டைக்காரனிருப்பு வரை செல்லும் பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் இயக்க வேண்டும்
இதே போல அதிகாலை 5:30 மணிக்கு தலைஞாயிறில் இருந்து ஆலங்குடி வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் பஸ்சை உப்பள தொழிலாளர்கள், வயல்வெளிக்கு செல்வோர் பயன்படுத்தி வந்தனர். அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. தலைஞாயிறு பகுதிக்கு வந்து சென்ற பஸ்கள் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே நாகை மாவட்டத்தில் இருந்து தலைஞாயிறு புறக்கணிக்கப்படுகிறதா என்ற எண்ணம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.