அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யை கட்சியில் இருந்து நீக்குவதா? ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுக்கு சசிகலா ஆதரவு
அ.தி.மு.க.வின் ஒரே எம்.பி.யான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்குவதா? என்று கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. எம்ஜி.ஆர். என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த பேரியக்கம். ஜெயலலிதா விட்டுச்சென்ற நாள் முதல் இப்போது வரை நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒருசில சுயநலவாதிகள் மேற்கொண்ட தவறான முடிவுகளே காரணம். இந்த முடிவுகளால் அ.தி.மு.க.வின் சிறப்பு குறைந்து, அதன் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருவதாக கட்சி தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஒரு சிலர் தனது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் எண்ணத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் அனைவரிடத்திலும் விதைத்து, தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமில்லாமல், தன்னை சுற்றி இருக்கின்ற சொந்த கட்சியினரையும் ஏன் இன்னும் சொல்லப்போனால் தங்களோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மாற்று கட்சியினரையும் கூட நம்ப வைத்து ஏமாற்றியதுதான் மிச்சம்.
எம்.பி.யை நீக்குவதா?
கட்சியின் நலனை காற்றில் பறக்கவிட்டு எடுத்த தவறான முடிவுகளால், மாநிலங்களவையில் நமது (அ.தி.மு.க.) உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்ததோடு, கட்சியின் அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம். இந்த சூழ்நிலையில் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை (ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி.) கட்சியை விட்டே நீக்குவதும், நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் பெயரை சொல்வதற்கு யாருமே வேண்டாம் என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் தொண்டர்கள் நியாயமற்ற செயலாகத்தான் பார்ப்பார்களே தவிர, அறிவார்ந்த செயலாக பார்க்கமாட்டார்கள்.
தனது சொந்த விருப்பத்துக்காக மக்களவையில் கட்சியின் அங்கீகாரத்தையே அழிக்க நினைப்பதை, தன் உடம்பில் உண்மையான அ.தி.மு.க. ரத்தம் ஓடும் கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இயக்கம் அழிந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது பதவிகளை தட்டி பறிக்கவேண்டும் என்று தாண்டி குதிப்பவர்களை எண்ணி தொண்டர்கள் சிறிதும் கவலைப்படாதீர்கள். அவர்கள் எண்ணம் தவறானது, இயக்கத்துக்கு எதிரானது என்பது வெளிப்படுகின்ற காலம் வந்துவிட்டது.
யாராலும் தடுக்க முடியாது
உண்மையான கட்சி தொண்டர்களின் பேராதரவோடு, நம்முடைய இயக்கம் சீரோடும், சிறப்போடும் செழிக்க இருக்கிறது. இதை யாராலும் தடுக்கவும் முடியாது. அதேபோன்று, "இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் எண்ணமும் நிச்சயம் ஈடேறும். இதை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கண்கூடாக பார்க்கத்தான் போகிறீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.