ஆதார் மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் இல்லாததால் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை காத்திருக்கும் நிலை உள்ளது.

Update: 2023-03-16 19:17 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையத்தில் கூடுதலாக பணியாளர்கள் இல்லாததால் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை காத்திருக்கும் நிலை உள்ளது.

ஆதார் அட்டை

காரியாபட்டி தாலுகாவில் 130-க்கும்மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை என பல்வேறு நகரங்களுக்கு சென்று படித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உடனடியாக பள்ளி நிர்வாகம் கூறிய போது ஆதார் அட்டையில் பெயர்களை சரி செய்ய காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் அட்டை எடுக்கும் மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.

காலை 4 மணிக்கு டோக்கன்

இந்த மையத்தில் ஆதார் அட்டை புதிதாகவோ அல்லது பெயர் மாற்றம் செய்யவோ அல்லது தொலைபேசி எண் இணைக்கவோ செல்ல வேண்டுமென்றால் அதிகாலை 4 மணிக்கு காரியாபட்டி தாலுகா அலுவலகம் வந்து டோக்கன் வாங்கி 10 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதுவும் தினமும் 30 டோக்கன் மட்டும் வழங்கப்படுகிறது. காலையில் டோக்கன் வாங்கி மாலை 5 மணிவரை காத்திருக்கவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் ஒருநாள் விடுமுறை எடுத்தால் மட்டுமே ஆதார் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும் பொதுமக்களும் எந்த வேலைக்கும் செல்லமுடியாமல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் கூடுதல் எண்ணிக்கையில் ஆட்களை நியமனம் செய்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்