மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரி முடியும் நேரங்களில் மாணவிகள் முன்பு மாஸ் காட்டியபடி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-03 18:07 GMT

புது ரக மோட்டார் சைக்கிள்கள்

மோட்டார் சைக்கிள்கள் நவீன வசதிகளுடன் பல புது ரகங்கள் வந்தப்படி உள்ளன. இளைஞர்களும் பிறரை கவரும் வகையிலான மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் சமீபகாலமாக மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலியுடன் வேகமாக சில வாலிபர்கள் செல்வதை காணமுடிகிறது. மேலும் இவர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடியும் மாலை நேரத்தில் மாணவிகள் முன்பு 'மாஸ்' காட்டுவதற்காக வேகமாக செல்கின்றனர். இதில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் கூட அமர்ந்து பயணிக்கின்றனர். மாணவிகள் நடந்து செல்லக்கூடிய சாலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து அதிக சத்தம்வரும்படி இயக்கி வேகமாக செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இதேபோல் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சைலென்சரில் இருந்து வரும் சத்தம் பீதியை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களும் அதிர்ச்சியடைகின்றனர். ஏன்? இப்படி வேகமாக செல்கிறார்கள்... என கேள்வி எழுப்பியப்படி செல்கின்றனர்.

போக்குவரத்து விதி மீறல்

புதுக்கோட்டை பெரியார் நகர், அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள சாலை, மன்னர் கல்லூரி அருகே உள்ள சாலை, புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலை உள்ளிட்ட இடங்களில் மாலை நேரத்தில் இதுபோன்று வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியபடி செல்பவர்களை பார்க்க முடியும். போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக வாகன சோதனை உள்ளிட்டவற்றில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் இது போன்று மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட மாலை நேரத்தில் போலீசார் ரோந்து சென்று அபராதம் விதிப்பதோடு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தொடர்ந்து இதுபோன்று வேகமாக செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

வீடியோ வைரல்

மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் நபர்கள் தாங்கள் செல்வதை பிறர் கவனிக்கும் வகையிலும், மாணவிகள் முன்பு தங்களை பிரபலப்படுத்தவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இதனை வீடியோ பதிவு செய்தும் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற போது 2 பேர் பலியான சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்