பாராமெடிக்கல்-லேப்டெக்னீசியன் மாணவர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படுமா?

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பாரா மெடிக்கல்-லேப் டெக்னீசியன் பயிற்சி மாணவர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படுமா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-06-16 18:45 GMT


திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பாரா மெடிக்கல்-லேப் டெக்னீசியன் பயிற்சி மாணவர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படுமா? என்று பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்னால் விடுதி வசதியுடன் கூடிய மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இதே போல் ஆஸ்பத்திரி வளாகத்தில் பாரா மெடிக்கல் படிப்பு மற்றும் லேப் டெக்னீசியன் படிப்பு கல்லூாியும் செயல்பட்டு வருகிறது. இங்கு பி.எஸ்சி. மருத்துவர் உதவியாளர், பி.எஸ்சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்சி. மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், பி.எஸ்சி. விபத்து மற்றும் அவசரகால தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சி என ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இருபாலருக்கும் என தனித்தனியாக விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தங்கி தங்களது கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

விடுதி வசதி இல்லை

ஆனால் பாராமெடிக்கல் மற்றும் லேப்டெக்னீசியன் படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லை. இதனால் அவர்கள் சிலம்பு நகர், சிங்களாஞ்சேரி, விளமல், தியான புரம், கூட்டுறவு நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக வீடு அல்லது அறையில் வாடகைக்கு தங்கி வருகின்றனா். இவர்கள் தங்கி இ்ருக்கும் பகுதிகள் அனைத்தும் ஆஸ்பத்திரியில் இருந்து சுமார் 1 முதல் 2 கி.மீ தூரம் வரை உள்ளது. காலையில் 9 மணிக்கு தொடங்கும் வகுப்பு மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதற்காக அந்த மாணவர்கள் அதிகாலையிலேயே எழுந்து தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயார் செய்து அதன்பின்னர் கல்லூரிக்கு வருகின்றனர். தினமும் நீண்ட தூரம் நடந்து சென்று வருவதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், திருவாரூர் மட்டுமின்றி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.

வசதி படைத்தவா்கள் அல்ல

எங்களது பிள்ளைகளுக்கு விடுதி வசதி இல்லாததால் பல மாணவிகள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து மொத்தமாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றனர். குறைந்தபட்சம் வாடகை ரூ.5 ஆயிரம் என்றால், ஒருவருக்கு ரூ.1000 வீதம் செலுத்துகின்றனர்.

மேலும் அவர்களுக்கான உணவை அவா்களே தயார் செய்து கொள்வார்கள். சிலர் கடையில் சாப்பிடுவார்கள். இதனால் வீட்டு வாடகை மற்றும் உணவுக்கு என்று மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது. இங்கு படிக்கும் அனைவரும் வசதி படைத்தவா்கள் அல்ல. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். எனவே மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக விடுதி வசதி இருப்பது போல் பயிற்சி மாணவிகளுக்கும் விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்