அன்னப்பன்பேட்டை தாமரை குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் திருவெண்காடு அருகே அன்னப்பன்பேட்டை தாமரை குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-11 18:45 GMT

திருவெண்காடு:

அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் திருவெண்காடு அருகே அன்னப்பன்பேட்டை தாமரை குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தாமரை குளம்

திருவெண்காடு அருகே கீழ மூவர்கரை, மேல மூவர்கரை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்கள் மற்றும் அதை சார்ந்த பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல பொதுமக்கள் மங்கை மடம், கோனையாம்பட்டினம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.மங்கை மடத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அன்னப்பன் பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தில் கரையில் நெடுஞ்சாலை செல்கிறது.

அடிக்கடி விபத்துகள்

இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை கடந்து தான் பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.தாமரை குளத்தின் அருகே அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் வாகனங்கள் செல்லும் போது தடுமாறி குளத்தில் விழுந்து வருகின்றன. இதுபோன்று விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், மங்கைமடம், கோனையாம்பட்டினம் சாலை நெடுஞ்சாலை துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடலோர கிராமங்களுக்கு சென்று வருகின்றன.இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி குளத்தில் விழுந்து வருகின்றனர். இதனை தடுக்க குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். தற்காலிகமாக குளத்தின் கரையில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்