நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?

வடகாடு பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-02-11 18:15 GMT

நெல் சாகுபடி

வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தாளடி சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற வேண்டிய தருணத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் சாய்ந்து அழுகி வீணாகி வருகிறது என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆழ்குழாய் கிணற்று பாசனம்

இப்பகுதிகளில் ஏரி, குளங்கள் இருந்தும் அவற்றிற்கு மழை தண்ணீர் செல்ல உரிய நீர் வழிப்பாதைகள் இல்லாமல் இருக்கின்றன. மேலும் குளம், ஏரி மற்றும் பாசன வாய்க்கால் முதற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் இருப்பதாலும், எந்தவொரு கனமழை சமயங்களிலும் இப்பகுதிகளில் ஏரி, குளங்கள் நிரம்புவதே இல்லை. மேலும் குளங்களில் இருக்கும் குறைந்த அளவிலான தண்ணீரும் ஒரு சில மாதங்களுக்குள் வற்றி வறண்டு விடுகின்றன. இதனால் இப்பகுதிகளில் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவே தென்னை, பலா, வாழை, கரும்பு, சோளம், கடலை, கத்தரி, உளுந்து, மற்றும் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடி பணிகளும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி பணிகளிலும் எண்ணற்ற விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால நெல் சாகுபடி கொள்முதல் அதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால், ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வரும் நெல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மணிகளை உரிய விலைகளில் விற்பனை செய்ய முடியாது. மேலும் அடிமாட்டு விலைகளில் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் ஒரு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்

மாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி அன்பழகன்:- இப்பகுதியில் ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும்.

வடகாடு பகுதியை சேர்ந்த பாலசுந்தரம்:- இப்பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்தும், இயற்கை பேரிடர்களால் அவை சேதமடைந்து அதற்கான அரசு உதவி தொகையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை நீடித்து வருகிறது. ஆதலால் அரசு ஒரு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்