கோட்டூர் பகுதியில், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தரப்படுமா?

கோட்டூர் பகுதியில், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தரப்படுமா?

Update: 2022-11-09 18:45 GMT

கோட்டூர் பகுதியில் கட்டிட வசதி இல்லாததால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கிவைக்கும் அவலம் உள்ளது. எனவே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திறந்தவெளியில் அடுக்கி வைக்கும் அவலம்

தமிழக அரசு, டெல்டா மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அறுவடை செய்யும் நெல்மணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தேவையான இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாத ஊர்களில் மழை காலங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் முற்றிலுமாக நனைந்து வீணாகி வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் இருள் நீக்கி, காடுவாக்குடி, சேந்தமங்கலம், மேலச்சேரி, மண்ணுக்கும் முண்டான், கருப்புக்கிளார், மேல புழுதிக்கடி, ஈசனகுடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊர்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தமாக கட்டிட வசதி இல்லாததால் கூரை கொட்டகை மற்றும் தகர கொட்டகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை திறந்தவெளியில் அடுக்கி வைத்து அதன் மேல் பிளாஸ்டிக் பைகளை கொண்டு மூடி வைக்கும் அவலம் உள்ளது. இதனால் மழைநேரங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிறது. மேலும் நெல்மூட்டைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை.

நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோட்டூர் பகுதியில் கட்டிட வசதி இல்லாத நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிற நெல் மூட்டைகளை சேதாரம் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களமும் அமைக்க வேண்டும்

செல்லப்பிள்ளையார் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தர்மராஜ்:- சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்புவதால் குறுவை சாகுபடிக்கு காலத்தோடு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் குறுவை நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து வருகிறது. குறுவை அறுவடை காலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்யும் நெல்மணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு இடமில்லாமல் விவசாயிகள் சாலைகளில் காய வைத்தும், சாலை ஓரங்களில் கொட்டியும் மூடி வைக்கிறார்கள். இதனால் பல்வேறு பொருளாதார நஷ்டம் மற்றும் நெல்மணிகளில் சேதாரம் ஏற்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டிடம் கட்டி கொடுப்பதன் மூலம் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியும். மேலும் கொள்முதல் நிலையத்தையொட்டி களமும் அமைக்க வேண்டும். களம் அமைத்து கொடுத்தால் மழைக்காலம் மட்டுமல்லாது எல்லா காலத்திலும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அரசு கொள்முதல் செய்த நெல்லையும் பாதுகாப்பதற்கு வசதியாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிரந்தர கட்டிட வசதியும், களமும் அமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்