வெள்ளை ஆற்றின் கரையோரத்தில் புதிதாக படித்துறை கட்டப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே வெள்ளையாற்றின் கரையோரத்தில் புதிதாக படித்துறை கட்டப்படுமா என அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-08-30 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வெள்ளையாற்றின் கரையோரத்தில் புதிதாக படித்துறை கட்டப்படுமா என அப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த படித்துறை

கூத்தாநல்லூர் அருகே, வேளுக்குடியில் உள்ள, கோம்பூர் பிள்ளையார் கோவில் அருகில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, வெள்ளையாற்றின் கரையோரத்தில் படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறையை வேளுக்குடி, கோம்பூர், கானூர், பழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிள்ளையார் கோவிலுக்கு வழிபாடு நடத்த வரும் பக்தர்களும் இந்த படித்துறையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்துறை மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இந்த படித்துறை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

கட்டப்பட்ட காலம் முதல் இந்த பகுதி மக்களுக்கு இந்த படித்துறை, ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் மிகவும் உதவிகரமாக இருந்தது. தற்போது இந்த படித்துறையில் பக்கவாட்டு சுவர்கள் இடிந்தும், படிக்கட்டுகள் முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருகிறது.

இருந்தபோதிலும் இந்த படிக்கட்டுகளில் தட்டு தடுமாறி இறங்கி படித்துறையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றர். இவ்வாறு படிக்கட்டுகளில் இறங்கிய சிலர் நிலை தடுமாறி விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே, இப்பகுதி பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த படித்துறையை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக படித்துறை கட்டித் தர வேண்டும் என்று கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்