புதிய பாலம் கட்டப்படுமா?

கொளப்பள்ளி அருகே புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-09-05 15:24 GMT

பந்தலூர், 

கொளப்பள்ளி அருகே புதிய பாலம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பாலம் விழுந்தது

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே எடத்தால் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆஸ்பத்திரி செல்லவும் கொளப்பள்ளிக்கு வந்து செல்ல வேண்டும். இதற்கிடையே அப்பகுதிக்கு செல்லும் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.

சாலையின் குறுக்கே நீரோடை செல்கிறது. இதனால் பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இருபுறமும் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. கனமழை பெய்த போது, புதிய பாலம், தடுப்புச்சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தது. அதன்பின்னர் தடுப்புச்சுவர் கட்டப்பட வில்லை.

தார்ச்சாலை அமைக்க வேண்டும்

இதனால் இன்டர்லாக் கற்கள் பதித்த சாலை மண் மூடி, குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அவசர தேவைகளுக்கு அந்த வழியாக எந்த வாகனமும் செல்வதில்லை. இதன் காரணமாக எடத்தால் பகுதியில் இருந்து நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்தபடி கொளப்பள்ளிக்கு செல்கின்றனர். சில நேரங்களில் நோயாளிகளை சுமந்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்து சென்று வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பாலம் இடிந்து விட்டதாலும், சாலை மோசமாக உள்ளதாலும் பச்சை தேயிலை மூட்டைகளை தொழிலாளார்கள் சுமந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. எனவே, அப்பகுதியில் புதிய பாலம் கட்டுவதோடு, தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம் கூறும்போது, ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் சாலையை ஆய்வு செய்து சென்றார். விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்