போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண உயர்மட்ட "யூ டர்ன்" பாலம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண உயர்மட்ட “யூ டர்ன்” பாலம் அமைக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-09-23 21:15 GMT

பால்பண்ணை சந்திப்பு

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை அமைந்துள்ளது. திருச்சி மாநகர எல்லைக்குள் வரும் இந்த பகுதியில் ஆறு சாலைகளைக் கொண்ட முக்கிய சந்திப்பு அமைந்துள்ளது. குறிப்பாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து திருவெறும்பூர் மார்க்கத்தில் செல்லும் வாகனங்கள், டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து காந்தி மார்க்கெட், திருவெறும்பூர் செல்லும் வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்து செல்ல வேண்டும். அதேபோல் தஞ்சாவூர் மார்க்கத்தில் இருந்து திருவெறும்பூர் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் திருச்சி நகருக்குள் நுழைய இந்த பால்பண்ணை சந்திப்பை கடந்தாக வேண்டும்.

இந்த பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அதனால் திருச்சியில் இருந்து நேரடியாக சென்னை செல்லும் வாகனங்களும், அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்களும் இந்த மேம்பாலத்தை கடந்து சென்று விடுகின்றன. சில நேரங்களில் சென்னை செல்லும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் இந்த பழைய பால்பண்ணை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு சென்னை பஸ்களும் வந்து செல்லும்.

போக்குவரத்து நெருக்கடி

மேலும் சேலம், பெரம்பலூர் மார்க்கம் செல்லும் அரசு பஸ்களும் இந்த பழைய பால்பண்ணை பஸ் நிறுத்தத்துக்கு வந்து செல்லும். இதனால் பழைய பால்பண்ணை சந்திப்பில் இருந்து மாநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இந்த சந்திப்பில் சிக்கித் தவிக்கின்றன. மிகவும் குறுகலான பகுதி என்பதால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

'பிரி லெப்ட்' எனப்படும் இடதுபுறம் திரும்பும் வாகனங்களுக்காக சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அத்துடன் போக்குவரத்தை சீரமைக்க தானியங்கி சிக்னல்களும் உள்ளன. இதில் ஒவ்வொரு சாலையிலும் சிவப்பு விளக்கு எரியும்போது 3 நிமிடங்கள் வரை வாகனங்கள் நிற்கும் நிலை உள்ளது. இதனால், அனைத்து சாலைகளிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால் இடதுபுறம் வாகனங்கள் திரும்ப முடியாத நிலை உள்ளது.

உயர்மட்ட பாலம்

இதனால் அந்த பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டதன் நோக்கமே வீணாகிவிட்டது. இங்கு அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நேரங்களில் போக்குவரத்து போலீசார் அதிகமாக நின்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாடக்குடி பகுதியில் உள்ளதை போல் "யூ டர்ன்" வடிவிலான பாலம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் பழைய பால் பண்ணை சந்திப்புக்கு முன்னதாக உயர்மட்ட "யூ டர்ன்" வடிவிலான பாலம் அமைக்க வேண்டும். அதேபோல் எதிர்மார்க்கத்தில் திருவெறும்பூர் சாலையில் ஒரு உயர்மட்ட "யூ டர்ன்" பாலம் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக பொறியாளர் ஒருவர் ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்துக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் வரைபடங்களை அனுப்பி இருக்கிறார். அதன்படி உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டால் பழைய பால்பண்ணை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியும், நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலையும் நிரந்தரமாக தீர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்