காளியப்பகவுண்டன்புதூரில் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆனைமலை அருகே வெள்ளப்பெருக்கின்போது தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குகிறது. அதனால் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
ஆனைமலை
ஆனைமலை அருகே வெள்ளப்பெருக்கின்போது தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குகிறது. அதனால் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
வெள்ளத்தில் மூழ்கும் தரைப்பாலம்
ஆனைமலை அருகே உள்ள காளியப்பன் கவுண்டர் புதூர் பகுதியைச் சுற்றி சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு 2 அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தின் அடிப்படையில் வந்து செல்கின்றன. பஸ் செல்லும் வழித்தடத்தில் தரைமட்ட பாலம் ஒன்று சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்படுள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டுச் சுவர்கள் உடைந்த நிலையில் உள்ளது. இந்தநிலையில் பருவமழை காலங்களில் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அதனால் ஆற்றில் அடித்து வரப்படும் தென்னை மட்டை, ஓலை, பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவை தரைமட்ட பாலத்தில் அடைத்துவிடுகிறது. இதனால் வெள்ளத்தில் பாலம் மூழ்குகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாலத்தின் வழியாக செல்லாமல் ஆத்து பொள்ளாச்சி வழியாக சுமார் 7 கிலோமீட்டர் சுற்றி அம்பராம்பாளையம் சுங்கம் வந்து பொள்ளாச்சி போன்ற மற்ற ஊர்களுக்கு செல்கின்றனர்.
உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்
இதனால் தேவையின்றி பெட்ரோல், நேரம், பணம் விரையம் ஆகிறது. பருவ மழைகாலத்தில் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஏதேனும் ஒரு நபர் ஆற்றில் அடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின் போது ஆழியார் அணையில் இருந்து 11 மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடின. அந்த சமயத்தில் பாலத்தை கடக்க முயன்ற சந்திர சாமி என்ற ஒரு விவசாயி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க காளியப்பன் கவுண்டர் புதூர் தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
10 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல...
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஆழியார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் ஆனைமலை-அம்பராம்பாளையம் ஆகிய 2 ஆற்றின் வழியாக காளியப்பன் கவுண்டன் புதூர் தரைமட்டபாலத்தின் வழியாக சென்று கேரளா பகுதிக்கு செல்கின்றன. பருவ மழையின் போது தரைமட்ட பாலம் முற்றிலும் மூழ்குகிறது. இதனால் சாலை இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மீனாட்சிபுரம், கேரளா பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 10 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ், விளைபொருட்களை ஏற்றி செல்லும் விவசாயிகளுக்கும் உயர்நிலை படிப்பு பயலும் மாணவர்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு ஆய்வு மட்டுமே செய்யப்படுகிறது. ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.