கடலை கொள்முதல் கிடங்கு அமைத்து தரமான விதை வழங்கப்படுமா?

ஆலங்குடியில் விதை கடலை கொள்முதல் கிடங்கு அமைத்து தரமான விதை வழங்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-12-04 19:03 GMT

கடலை சாகுபடி

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தான் கடலை சாகுபடி பணிகளும், கடலை மில்களும், அதை சார்ந்த தொழில்களும் அதிகமாக நடைபெற்று வந்துள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் காலப்போக்கில் பருவ காலங்களில் போதிய மழை இல்லாததாலும், உற்பத்தி செய்யும் கடலைக்கு போதிய விலை கிடைக்காததாலும் படிப்படியாக கடலை சாகுபடி பணிகள் குறைந்ததோடு மட்டுமல்லாமல் 170 கடலை மில்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 70 முதல் 80 மில்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கடலை மில்களுக்கு புதுக்கோட்டை விவசாயிகள் மட்டுமின்றி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கடலைகளை விவசாயிகள் கொண்டு வந்து அரவைக்காக ஆலங்குடி மில்களில் கொடுப்பது வழக்கம்.

மாற்று பயிர்களை நோக்கி...

இந்நிலையில் ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடலை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு போதிய அளவு விதை கடலைகள் கிடைக்க வில்லை. கிடைக்கும் விதை கடலைகளும் 35 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதுவும் உரிய தரச்சான்று இல்லாத கலப்படம் கலந்த முளைப்பு திறனின்றி தரம் இல்லாமல் இருப்பதால் கடலை சாகுபடியில் ஈடுபடக்கூடிய விவசாயிகள் அதை தவிர்த்து மாற்று பயிர்களை நோக்கி சென்று வருகின்றனர்.

மேலும் அதிகப்படியான கடலை விதைகள் விற்பனையாளர்கள், உரிய தரச்சான்று பெறாமல் போலியான விதைகளை விற்று வருவதாகவும் போலியான விதைக்கடலைகளை விவசாயிகள் கண்டறிய முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.

அதிகாரிகள் தடை

ஆலங்குடியில் உரிய தரச்சான்று இல்லாமல் விற்பனைக்காக 5 விதை கடலை கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.59 கோடி மதிப்பிலான 156 டன் விதைக்கடலை விற்பனை செய்ய விதை உரிம ஆய்வுத்துறை அதிகாரிகள் தடை விதித்து சென்றனர். இந்த நிலையிலும் தொடர்ந்து தரச்சான்று இல்லாத விதை கடலைகள் அப்பகுதியில் விற்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கடலை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு வேளாண் விற்பனை மையத்திலும் உரிய முறையில் விதை கடலை கிடைப்பது இல்லை. குறைந்த அளவிலான விதை கடலை கொடுத்தாலும் அது தரமற்ற முறையில் இருக்கிறது.

கடலை கொள்முதல் கிடங்கு அமைக்க வேண்டும்

கடலை உற்பத்தி செலவுக்கேற்ப உரிய விலை கிடைப்பதில்லை. கடலை விவசாயிகள் நிலையை கருத்தில் கொண்டு வேளாண்மை துறையினர் வேளாண் விற்பனை மையத்தில் தரமான கடலை விதைகளை போதிய அளவு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதேபோல் தமிழக அரசு கடலை விவசாயிகளிடமிருந்து உற்பத்தி செலவுக்கேற்ப உரிய விலையை நிர்ணயித்து அரசு நேரடியாக கடலை கொள்முதல் நிலைய கிடங்கு ஆலங்குடியில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தரமான விதைகளை வழங்க வேண்டும். இதை செய்தால் மட்டுமே ஆலங்குடி பகுதியில் கடலை சாகுபடி பணிகள் தொய்வில்லாமல் இருக்கும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலப்போக்கில் கடலை சாகுபடி பணியும், கடலை மில்களும் அதைச்சார்ந்த தொழில்களும் அழிந்துவிடும். ஆலங்குடி பகுதியில் கடலை விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வனஸ்பதி தொழிற்சாலையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

20 கிலோ மூட்டை ரூ.2ஆயிரம்...

கடலை வியாபாரி முருகன்:- ஆலங்குடியில் சுமார் 120-க்கும் அதிகமான விதை கடலை வியாபாரிகள் தமிழக அளவில் வியாபாரம் செய்து வருகிகின்றனர். விவசாயிகள் விதைகடலை பெற்று செல்கின்றனர். விதை கடலை குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜீ 7 (ஏழு) மற்றும் வெஸ்டன் என 2 ரகங்களாக பிரிக்கப்பட்டு இங்கு விற்கப்படுகிறது. 20 கிலோ கொண்ட ஒரு மூட்டை விதை கடலை ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இங்கு குஜராத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரும் விதைகடலைகள் 16 முதல் 20 டன் வரை வருகின்றன. குஜராத்தில் இருந்து ஆலங்குடிக்கு லாரியில் கொண்டு வருவதற்கு சுமார் ரூ.2 லட்சத்துக்கு மேல் வாடகை வருகின்றது. தமிழகத்தில் ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் போதிய அளவு விதை கடலைகள் கிடைக்காததால் குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விதை கடலைகளை கொள்முதல் செய்து கொண்டு வந்து பெண்களை வேலைக்கு வைத்து கடலை உடைத்து அரிசியாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஆலங்குடியில் விதை கடலை கொள்முதல் கிடங்கு அமைக்க வேண்டும் என்றார்.

6 ஆயிரம் விதை மூட்டைகள்

விவசாயி சண்முகம்:- பல ரக விதைகள் இருந்தாலும், நல்ல ரகங்கள் ஆலங்குடி வியாபாரிகள் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு விற்கப்படும் விதை கடலை 20 முதல் 40 கிலோ மூட்டை என நிர்ணயம் செய்து விற்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் அல்லாது ஏனைய மாவட்டங்களுக்கும் ஆலங்குடியில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆலங்குடியில் இருந்து விதை கடலை தினசரி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆலங்குடி நகரில் வருடத்திற்கு சுமார் 150 லாரிகளில் விதை கடலை ஏற்றி வருவதாகவும், வியாபாரிகள் ஒவ்வொரு வருடத்திற்கும் சுமார் 10 ஆயிரம் கடலை மூட்டைகள் வரை விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தாண்டு வரை சுமார் 6 ஆயிரம் விதை கடலை மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்