15 ஆண்டுகள் முடிந்து காலாவதியானதால் 1,500 அரசு பஸ்கள் இன்று முதல் நிறுத்தமா?

15 ஆண்டுகள் முடிந்து காலாவதியானதால் 1,500 அரசு பஸ்கள் இன்று முதல் நிறுத்தமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Update: 2023-05-15 19:28 GMT

நமது நாடு கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாட்டில் உலக அளவில் முதல் 3 இடங்களுக்குள் உள்ளது. காற்று மாசுபாட்டால் நாட்டில் ஏற்படும் ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் 50 சதவீதம் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மராட்டியம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில்தான் நிகழ்கிறது. இதில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது.

காலாவதியான வாகனங்கள் அழிப்பு

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 85 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நாட்டில் காற்று மாசு ஏற்படுவதால் உண்டாகும் பெரும் உயிர் இழப்புகளை தடுப்பதற்காக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் காலாவதியானவை என்று அறிவிக்கப்பட்டு அவை கழிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டு இருந்தார். இத்திட்டம் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டாயம் நடைமுறைக்கு வரும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் 20 ஆண்டுகளும், லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகளும் ஓடியிருந்தால் அவை கட்டாயம் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவேண்டும். மத்திய அரசின் இந்த கொள்கை முடிவு தமிழக அரசுக்கு தற்போது பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. இதற்கு தமிழகத்தில் ஓடும் அரசு போக்குவரத்து கழகத்தின் 21 ஆயிரம் பஸ்களில் 1,500 பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து காலாவதி ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பதே காரணம்.

1,500 பஸ்கள்

இதனால் தான் மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி தலைமையில் டெல்லியில் நடந்த அனைத்து மாநில போக்குவரத்து துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் சிவசங்கர் இதுதொடர்பான ஒரு கோரிக்கையை வைத்தார். அப்போது "தமிழகத்தில் 15 வருடங்களுக்கும் மேலாக ஓடும் அரசு பஸ்கள் 1,500 உள்ளன. இதேபோல அரசு மற்றும் அரசு சார்புடைய துறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் வாகனங்கள் 2,500 இருக்கின்றன. இந்த 1,500 அரசு பஸ்களையும் கழித்துக்கட்டினால் தமிழகத்தில் பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கத்தை நிறுத்தும் சூழல்தான் ஏற்படும். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு உருவாகும். எனவே இந்த பஸ்களை மேலும் 1½ ஆண்டுகள் இயக்குவதற்கு நீட்டிப்பு செய்யவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

கால அவகாசம் முடிந்தது

ஆனால் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அழிப்பு கொள்கை நடைமுறைக்கு வந்து அப்போது 2 வாரங்களுக்கும் மேலாகி விட்டதால் மத்திய மந்திரி நிதின் கட்கரி இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. 45 நாட்கள் மட்டும் கால அவகாசம் வாய்மொழியாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் நேற்றுடன் 45 நாட்கள் முடிந்துவிட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அந்த பஸ்களை இயக்க வேண்டும் என்றால் அதற்குரிய அபராத தொகையை கட்டி மேலும் நாட்கள் நீ்டிப்பு செய்து கேட்கலாம். இல்லை என்றால் காலாவதியான அனைத்து பஸ்களும் இன்று முதல் இயக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இன்று முதல் நிறுத்தமா?

ஏற்கனவே தமிழகத்தில் ஓடுகிற 21 ஆயிரம் அரசு பஸ்களில் 4 ஆயிரம் பஸ்கள் பல்வேறு காரணங்களுக்காக இயக்கப்படுவதில்லை என்று கூறப்படும் நிலையில், 15 வருடத்திற்கும் மேலான பழமையான 1,500 பஸ்களை கழித்து விட்டால் தமிழகத்தில் சுமார் 15 ஆயிரத்து 500 பஸ்களை மட்டுமே இயக்கக்கூடிய நெருக்கடியான நிலைக்கு அரசு தள்ளப்படலாம். கழிக்கப்படும் நிலையில் உள்ள 1,500 பஸ்களில் 500 பஸ்கள் மாநகர பஸ்கள் என்ற இன்னொரு பகீர் தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே புதுச்சேரி அரசு கடந்த 1-ந்தேதி முதல் காலாவதியான பஸ்களை நிறுத்திவிட்டது. தமிழகத்திலும் காலாவதியான பஸ்கள் இன்று முதல் நிறுத்தப்பட்டால், பஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். தற்போது தொலைதூர கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் இரவு 8 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டு விடுகின்றன. பகலிலும் கூட காலை 8 மணிக்கு பிறகுதான் அந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன. இடைப்பட்ட நேரங்களிலும் ஓரிரு நடைகள் திடீரென்று நிறுத்தப்பட்டு விடுகின்றன.

பல இடங்களில் பஸ்சுக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்து நிற்கும் பரிதாப காட்சிகளையும் காண முடிகிறது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்