வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்

பேரணாம்பட்டு பகுதியில் பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-09-14 17:44 GMT

குறை தீர்வு கூட்டம்

பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நெடுமாறன் தலைமையில் நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் தனலட்சுமி, மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் சவுந்தர்யா, வனவர் அண்ணாமலை, உதவு வேளாண்மை அலுவலர் செல்வன், உதவி தோட்டக்கலை அலுவலர் குயிலி, மின்வாரிய உதவி பொறியாளர் அனுஷ்யா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அவர்கள் பேசியதாவது:-

கழிவுநீர்

பேரணாம்பட்டு நகரிலுள்ள ஏரியில் தோல், வஜ்ஜிரம் தயாரிக்கும் தொழிற் சாலைகளின் கழிவு நீர் மற்றும் நகராட்சி பகுதி கழிவு நீரை விடுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. பேரணாம்பட்டு பகுதியிலுள்ள விவசாய கிணறுகள், ஆழ் துளை கிணறுகளின் குடிநீரை மாதிரி எடுத்து சென்று உப்பு தன்மையை கண்டறிய வேண்டும் என்றனர்.

கிராமப்புறங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்ய முடிவதில்லை. சீரான மின்சாரம் வழங்க வேண்டும். கிராமங்களில் அடிக்கடி டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்து வருகின்றன. இதனை சரிசெய்ய விவசாயிகளிடமிருந்து ரூ.30 ஆயிரம் முதல் வசூலித்து தனியாரிடம் கொடுத்து காயில் கட்டி பொருத்துகின்றனர். இதற்கு பணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.

தடுக்க வேண்டும்

விவசாய நிலங்களில் காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்புமாறு கேட்டு வருகிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 நாள் பணியாளர்கள் விவசாய பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதேபோன்று இங்கும் விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்