வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2023-02-07 19:49 GMT

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

கணக்கெடுக்கும் பணி

களக்காடு புலிகள் காப்பகத்தில் உள்ள புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், கடமான், சருகு மான், முள்ளம்பன்றி, காட்டெருமை, ராஜநாகம், கருமந்தி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டுக்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

உபகரணங்கள் வழங்கல்

களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் சூழலியலாளர் ஸ்ரீதர், உயிரியலாளர் ஆக்னஸ் பயிற்சி அளித்தனர். இதில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம், வனவர் ஜாக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கொசுவலை, மழை கோர்ட், டார்ச் லைட், செல்போன் மற்றும் உபகரணங்களை துணை இயக்குனர் ரமேஷ்வரன் கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார்.

13-ந் தேதி வரை

அதன் பின்னர் வனத்துறை ஊழியர்கள் 80-க்கும் மேற்பட்டோர் அடங்கிய 21 குழுவினர் களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச்சரகங்களுக்கு சென்று கணக்கெடுப்பு பணியை தொடங்கினர்.

இவர்கள் வருகிற 13-ந் தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து செல்போன் ஆப் மூலம் வனவிலங்குகளை கணக்கெடுப்பார்கள். பின்னர் இந்த தகவல்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்