காட்டுத்தீ விளைநிலங்களுக்கு பரவியது; 10 ஆயிரம் வாழைகள் கருகின

களக்காடு மலையில் பற்றிய காட்டுத்தீ விளைநிலங்களுக்கும் பரவியதால், 10 ஆயிரம் வாழைகள் கருகின.

Update: 2023-06-14 19:00 GMT

களக்காடு:

களக்காடு மலையில் பற்றிய காட்டுத்தீ விளைநிலங்களுக்கும் பரவியதால், 10 ஆயிரம் வாழைகள் கருகின.

காட்டுத்தீ

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் நடராஜன் மகன் பால்ராஜ் (வயது 48), விவசாயி. இவர் களக்காடு மலையடிவாரத்தில் தேங்காய் உருளி அருவி அருகே உள்ள திருவாவடுதுறை மடத்திற்கு சொந்தமான விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இதற்கிடையே, களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் வடகரை பீட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. வனத்துறையினர் சென்று தீயை அணைத்தனர். ஆனால், நேற்று முன்தினம் மதியம் மீண்டும் அந்த பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

விளைநிலங்களுக்கு பரவியது

அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது. வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ, திடீரென மலையடிவாரத்தை தாண்டி, விளைநிலங்களுக்கும் பரவியது.

மேலும், பால்ராஜ் பயிர் செய்து வரும் விளைநிலங்களை சூழ்ந்தது. இதனால் 8 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பற்றி எரிந்தன.

10 ஆயிரம் வாழைகள் கருகின

இந்த தீ விபத்தில் 10 ஆயிரம் வாழைகளும், தோட்டத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 8 ஆயிரம் வாழைவாரி கம்புகளும் தீயில் கருகி சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது.

தீயில் கருகிய வாழைகள் ஏத்தன், ரசகதலி, மட்டி வகையை சேர்ந்தது ஆகும். தீயினால் கருகிய வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும், ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்