மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ
வாசுதேவநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ பிடித்தது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செல்லப்புள்ளி மெட்டு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ பிடித்தது. நேற்று 2-வது நாளாக தீப்பிடித்து எரிந்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. அங்குள்ள மரங்கள், செடி, கொடிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் புளியங்குடி வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் 35 வனக்காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. தீயை அணைக்க போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிபத்தில் அரிய வகை மூலிகைகள், தாவரங்கள், மூங்கில் மரங்கள், தேக்கு, வேங்கை உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமானது.