காட்டுநாயக்கன் மக்கள் 64 பேருக்கு சாதி சான்றிதழ்: கனிமொழி எம்.பி. வழங்கினார்
சூழவாய்க்காலில் காட்டுநாயக்கன் மக்கள் 64 பேருக்கு சாதி சான்றிதழை கனிமொழி எம்.பி. வழங்கினார்
ஏரல்:
ஏரல் அருகே சூழவாய்க்கால் பகுதியில் வசித்து வரும் 64 காட்டுநாயக்கன் மக்களுக்கு சாதி சான்றிதழை கனிமொழி, எம்.பி. வழங்கினார்.
சாதி சான்றிதழ்
ஏரல் அருகே உள்ள சூழவாய்க்கால் மகா கணபதியாக புரத்தில் காட்டுநாயக்கன் மக்கள் வசித்து வருகின்றனர்.இதில் பெரும்பாலானவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இதை அடுத்து அந்த இன் குழந்தைகள் பள்ளி, கல்லூரியில் சேரமுடியாமலும், அந்த இனமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் அப்பகுதி மக்கள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, எம்.பி. நடவடிக்கை எடுத்தாா். இதை தொடர்ந்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சூழவாய்க்கால் கிராமத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 64 பேருக்கு சாதி சான்றிதழ், 44 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை, 2 பேருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி, சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன், துணைத் தலைவர் இப்ராஹிம்சா, ஊர் தலைவர் வேதமுத்து, ஏரல் பேரூராட்சி தலைவர் சர்ளமிளாதேவி மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பரிமளா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், சமூகநல தாசில்தார் சங்கரநாராயணன், மண்டல துணை தாசில்தார் பொன்லட்சுமி, வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரடிக்குளம்
கயத்தாறு யூனியன் கரடிகுளம் கிராமம் கொக்குகுளத்தில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் 30ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி, எம்.பி. மற்றும் சமுக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட மேயர் ஜெகன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கயத்தாறு யூனியன் தலைவர் மாணிக்கராஜா, ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் ரெஜினோல்ட், பஞ்சாயத்து தலைவர் ஜெயசுந்தரிதங்கவேல், துணை தலைவர் ஆரோக்கியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், பானு, யூனியன் பொறியாளர் கள் பாலநமச்சிவாயம், ஓவர்சியர் சிவனுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.