குட்டியுடன் காட்டு யானைகள் அட்டகாசம்

பேரணாம்பட்டு அருகே குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகள் வாழை மற்றும் நெற்பயிர்களை சூறையாடின.

Update: 2023-06-15 18:02 GMT

குட்டியுடன் காட்டு யானைகள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் பத்தலப் பல்லி, சேராங்கல், எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, ரங்கம் பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக குட்டி யானையுடன் சுற்றித் திரிந்து வரும் காட்டு யானைகள் இங்குள்ள விவசாய நிலங்கள், மா, வாழை தோப்புகளில் நுழைந்து சூறையாடி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒருகுட்டியுடன் 4 காட்டு யானைகள் கூட்டமாக சேராங்கல் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள மொகிலய்யா என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்து குலையுடன் கூடிய 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. பின்னர் அருகிலுள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருடைய விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஒரு ஏக்கர் நெல் பயிரை மிதித்து துவம்சம் செய்தன.

விரட்டியடிப்பு

காட்டு யானைகள் அட்டகாசம் நள்ளிரவு 2 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நீடித்தது. அப்பகுதியில் முகாமிட்டிருந்த வனவர் இளையராஜா மற்றும் வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டியடித்தனர்.

காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் சேராங்கல் வனப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்