காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை

மதுக்கரை அருகே தண்டவாளத்தை காட்டு யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2022-12-19 18:45 GMT

மதுக்கரை

மதுக்கரை அருகே தண்டவாளத்தை காட்டு யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

காட்டு யானைகள்

கோவையை அடுத்த மதுக்கரையில் இருந்து கேரளாவுக்கு செல்ல வனப்பகுதி வழியாக 2 தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளம் வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் சென்று வருகின்றன. இதில் 12 கி.மீ. தூரத்துக்கு முற்றிலும் வனப்பகுதி வழியாக தண்டவாளம் செல்கிறது.

மேலும் இந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால், அவை தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்யும்போது ரெயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ரெயில் மோதி உயிரிழந்து உள்ளது.

2 இடத்தில் சுரங்கப்பாதை

குறிப்பாக மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை ரெயில் நிலையத்தில் இருந்து இருந்து கேரள மாநிலம் கஞ்சிக்கோடு வரை காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே ரெயிலில் காட்டு யானைகள் அடிபடுவதை தடுக்க இரவில் 45 கி.மீ. வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் எட்டிமடை ரெயில் நிலையம் அருகே வனப்பகுதியில் தண்டவாளத்தின் கீழ் 2 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்று ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.இது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது:-

மதுக்கரையில் இருந்து கோவை மாவட்ட எல்லை வரை வனப்பகுதியில் ஏ மற்றும் பி என்று 2 தண்டவாளங்கள் செல்கின்றன. இதில் பி லைன் தண்டவாளப்பகுதி வனப்பகுதியில் 3 கி.மீ. தூரம் சென்றாலும் அது உயரமாக இருப்பதால் காட்டு யானைகளால் தண்டவாளத்தை எளிதில் கடக்க முடியாது.

எனவே இந்த தண்டவாளத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் 2 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக தேவையான அனைத்து பொருட்களும் தற்போது கொண்டு வரப்பட்டு வருகிறது. பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

உயிரிழக்க வாய்ப்பு இல்லை

இந்த சுரங்கப்பாதையை காட்டு யானைகள் பயன்படுத்த தொடங்கினால் ரெயில் மோதி யானைகள் உயிரிழக்க வாய்ப்பு இல்லை. மேலும் காட்டு யானைகள் சுரங்கப்பாதையை பயன்படுத்துவதை பொறுத்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்