குட்டிகளுடன் உலா வரும் காட்டுயானைகள்
குட்டிகளுடன் உலா வரும் காட்டுயானைகள்
வால்பாறை
வால்பாறை பகுதியில் இரவில் கடுங்குளிரும், பகலில் கடுமையான வெயிலும் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதியை ஒட்டிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி விட்டது. இதன் காரணமாக காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தண்ணீரை தேடி குட்டிகளுடன் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக தேயிலை தோட்டங்கள் மற்றும் அதை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் உலா வருவதை காண முடிகிறது. அவை பட்டப்பகலிலும் சுற்றித்திரிவதால், தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் எந்த நேரத்தில் எந்த இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் என்று கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எஸ்டேட் பகுதி மக்கள் இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களை பணிக்கு அனுப்புவதற்கு முன் எஸ்டேட் நிர்வாகிகள் தேயிலை தோட்ட பகுதிகளை வனவிலங்குகள் உள்ளதா? என சுற்றிப்பார்த்து விட்டு அனுப்ப வேண்டும் என்றனர்.