வால்பாறைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள்

கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

Update: 2022-08-22 17:30 GMT

வால்பாறை, 

கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறைக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

காட்டு யானைகள்

வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வறட்சி தொடங்கியது. இதனால் வால்பாறை வனப்பகுதியில் இருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு சென்று விட்டன. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதைதொடர்ந்து கேரள வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மீண்டும் வால்பாறை வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி உள்ளது.

தமிழக-கேரள எல்லையில் உள்ள வால்பாறை வனப்பகுதி, சாலக்குடி வனப்பகுதியில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவை காலசூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் ஆகிய காரணங்களுக்காக இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். அந்த வகையில் வால்பாறை வனப்பகுதிக்கும், கேரள வனப்பகுதிக்கும் யானைகள் சென்று வருகின்றன.

வனத்துறையினர் கண்காணிப்பு

தமிழக-கேரள வனப்பகுதிகளை ஒட்டி உள்ள எஸ்டேட் பகுதிகளான நல்லமுடி, பன்னிமேடு, அக்காமலை, முருகன் எஸ்டேட், குரங்கு முடி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நேற்று வால்பாறை அருகே உள்ள குரங்குமுடி எஸ்டேட் வனப்பகுதி வழியாக வந்த யானைகள் குரங்குமுடி எஸ்டேட் வழியாக கெஜமுடி எஸ்டேட் வனப்பகுதிக்கு சென்றன.

இதனை தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் குரங்கு முடி, முருகன் எஸ்டேட், கெஜமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்டேட் பகுதி மக்கள் இரவு நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். காட்டு யானைகள் நடமாட்டம் குடியிருப்பு பகுதிக்கு வருவதை பார்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்