வாழை தோப்புகளை சூறையாடி வரும் காட்டு யானைகள்
பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து வாழை மற்றும் விவசாய பயிர்களை யானைகள் சூறையாடி வருவதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகள் அட்டகாசம்
பேரணாம்பட்டு பகுதியில் சுற்றி திரிந்து வரும் ஒற்றை யானை குண்டலப் பல்லி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மாந்தோப்பு மற்றும் வாழைத்தோப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி மோர்தானா அணை பகுதியிலிருந்து 5 காட்டு யானைகள், 2 குட்டிகளுடன் பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் மலை வழியாக கோக்கலூர் வனப்பகுதிக்குள் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் புகுந்தன.
அங்கு ஜங்கமூர் கிராமத்தில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் வாழைத்தோப்பில் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த 250 வாழை மரங்களையும், நரேஷ்பாபு என்பவருக்கு சொந்தமான 250 வாழை மரங்களையும், 8 தென்னை மரங்களையும் சூறையாடின.
நிரந்தர தீர்வு காண வேண்டும்
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். பினனர் தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் சுமார் 3 மணி நேரம் போராடி அருகிலுள்ள காப்புக்காட்டிற்குள் யானைகளை விரட்டினர்.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ்குமார், வனவர் அண்ணாமலை மற்றும் வனத்துறையினர் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர்.
ஒரு பக்கம் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் கூட்டமாக வந்து அட்டகாசம் செய்யும் யானைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாய பயிர்களையும், தங்களையும் பாதுகாக்க நிரந்தர தீர்வு காணவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.