வாழை மரங்களை சூறையாடிய காட்டு யானைகள்

பேரணாம்பட்டு அருகே விவசாயி நலங்கலில் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்கள் சூறையாடி சென்றன.

Update: 2023-01-04 16:42 GMT

காட்டு யானைகள்

பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி அணை திட்ட பகுதி, எருக்கம்பட்டு, கோட்டையூர் மற்றும் அரவட்லா மலை கிராமம் உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் கடந்தசில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் புகுந்து வாழை, தக்காளி மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே உள்ள பாஸ் மார்பெண்டா மலை கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து 4 காட்டு யானைகள் வெளியேறி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழை மரக்கன்றுகளை பிடுங்கி ருசித்து தின்று வாழை தோட்டத்தை சூறையாடி உள்ளது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த 1 ஏக்கர் கொள்ளுபயிர் மற்றும் ½ ஏக்கர் தீவனப் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது.

விரட்டியடிப்பு

அதேபோன்று அருகில் உள்ள குப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த உருளை கிழங்குகளை ருசித்து தின்று, ½ ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கொள்ளுப்பயிர், மற்றும் சம்பத் குமார் என்பவர் 1¼ ஏக்கரில் பயிரிட்டிருந்த கொள்ளுபயிர் ஆகியவற்றையும் சேதப்படுத்தி உள்ளது.

அப்போது யானைகள் பிளிறியதை உணர்ந்த நாய்கள் குரைத்த சத்தத்தை கேட்டு நிலத்தில் காவலுக்கு தூங்கி கொண்டிருந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் வரை பட்டாசு வெடித்து அருகிலுள்ள மோர்தானா காப்புக் காட்டுக்குள் யானைகளை விரட்டினர். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு வனவர் அண்ணாமலை மற்றும் வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தினர். காட்டு யானைகள் தொடர்ந்து அட்ட காசத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண ஆழமான அகலமான அகழிகள் வெட்ட வேண்டும் என்றும், சோலார் மின் வேலிகள் அமைத்து தருமாறு பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்