தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய காட்டுயானைகள்

பழனி அருகே கோம்பைபட்டியில் தோட்டத்தில் புகுந்த காட்டுயானைகள் மக்காச்சோளம், தென்னையை நாசப்படுத்தின.

Update: 2023-02-09 19:00 GMT


பழனி அருகே கோம்பைபட்டியில், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இங்கு கரும்பு, மா, தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி கோம்பைபட்டியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுவது வழக்கம். அப்போது விளைபயிர்களை சேதப்படுத்தி செல்லும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக கோம்பைபட்டி பகுதியில் 1 குட்டியுடன் 4 காட்டுயானைகள் சுற்றித்திரிவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோம்பைபட்டியை சேர்ந்த குணசேகரன் என்பவரது தோட்டத்துக்குள் 4 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் அங்குள்ள மக்காச்சோள பயிர்கள், தென்னை மரங்கள் ஆகியவற்றை நாசப்படுத்தின. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்து வீட்டின் மேற்கூரையையும் காட்டுயானைகள் சேதப்படுத்தின.

இழப்பீடு வேண்டும்

இந்நிலையில் நேற்று காலையில் தோட்டத்துக்கு சென்ற குணசேகரன் பயிர்கள் சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே யானைகள் அட்டகாசம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள், வனத்துறையினரிடம் காட்டுயானைகள் அட்டகாசம் குறித்து தெரிவித்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர். மேலும் சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதையடுத்து பேசிய வனத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்