குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள்

சேரம்பாடி அருகே குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

Update: 2022-05-28 14:58 GMT

சேரம்பாடி அருகே குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

காட்டு யானைகள்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி, கோரஞ்சால், சப்பந்தோடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அங்கு பயிரிடப்பட்டு உள்ள வாழை, பாக்கு, தென்னை மரங்களை நாசம் செய்து வருகிறது. மேலும் குடியிருப்புகளில் புகுந்து வீடுகளை முற்றுகையிடுகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கும் நிலை உள்ளது. சேரம்பாடியில் இருந்து கையுன்னி, எருமாடு, சுல்தான்பத்தேரி செல்லும் சாலைகளை யானைகள் வழிமறித்து வருகின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

பலா பழங்கள் அகற்றம்

இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர்கள் மாண்பன், ஆனந்த், வனகாப்பாளர் கிருபானந்தகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் அய்யன்கொல்லி-கொளப்பள்ளி செல்லும் சாலையை பகல் நேரத்தில் ஒற்றை காட்டு யானை வழிமறித்தது. இதை அறிந்த பிதிர்காடு வன பாதுகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வனத்துறையினர் சென்று யானையை விரட்டினர். தற்போது பலா பழ சீசன் தொடங்கி உள்ளதால், பலா பழங்களை ருசிக்க காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகின்றன. யானைகள் ஊருக்குள் புகாமல் இருக்க பலா பழங்களை வெட்டி அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கோரஞ்சால் பகுதியில் பலா மரங்களில் உள்ள பலா பழங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும் வீடுகள் அருகே உள்ள பலா பழங்களை தேடி காட்டு யானைகள் வருவதை தடுக்க, அந்த பழங்களை பொதுமக்கள் வெட்டி அகற்ற வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்