குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்
கோவை
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
காட்டு யானைகள்
கோவை கோட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அதுபோன்று கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை கோட்ட வனப்பகுதி வலசைபாதையாக இருப்பதால் இங்கு ஏராளமான காட்டு யானைகள் இடம் பெயர்ந்து சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் காட்டு யானைகள் அருகில் உள்ள மலையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தொண்டாமுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 6 காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறியன. பின்னர் அந்த காட்டு யானைகள் தோட்டப்பகுதி வழியாக நடந்து சித்திரைச்சாவடி தடுப்பணை அருகே நொய்யல் ஆற்றுக்குள் முகாமிட்டன.
வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் பட்டாசுகளை வெடித்து அவற்றை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானைகள் ஆற்றை விட்டு வெளியே வராமல் அங்குமிங்கும் ஓடின.
பின்னர் ஆற்றைவிட்டு வெளியேறிய காட்டு யானைகளை துரத்தினார்கள். தொடர்ந்து அந்த காட்டு யானைகள் கரடிமடை அருகே உள்ள அய்யாச்சாமி கோவில் பகுதியில் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. அங்கு வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் சென்றாலும் வனத்துறையினர் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கவனமாக இருக்க வேண்டும்
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் நடமாடி வருகிறது.
எனவே வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரும் தனியாக வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது. அதுபோன்று இரவு நேரத்தில் மலையோர கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியே படுத்து உறங்க வேண்டாம் என்றனர்.