வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர், டிச
பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண் 1, 2, 3, 4 தேயிலை தோட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1-ல் காட்டு யானைகள் புகுந்தன. அங்கு நடராஜ் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து ரேஞ்ச் எண்.3-ல் கணேசன், ஜெயமணி, பரமேஸ்வரி, சிங்காரம், மயில் ஆகிய 5 பேரின் வீடுகளின் மேற்கூரைகளை உடைத்து அட்டகாசம் செய்தன.
மேலும் காட்டு யானைகள் வீடுகளை முற்றுகையிட்டது. இதையடுத்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த செந்தில் என்பவரது ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள், தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதேபோல் சேரங்கோடு சோதனைச்சாவடி அருகே உள்ள ரேஷன் கடையை யானைகள் உடைக்க முயன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின் படி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் ஞானமூர்த்தி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளர்கள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.