டேன்டீ தோட்டத்தில் காட்டு யானைகள் மோதல்
கொளப்பள்ளி டேன்டீ தோட்டத்தில் காட்டு யானைகள் மோதிக்கொண்டன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
பந்தலூர்
கொளப்பள்ளி டேன்டீ தோட்டத்தில் காட்டு யானைகள் மோதிக்கொண்டன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன. அவை அடிக்கடி வாழை, பாக்கு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் வாகனங்களை வழிமறிப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.1 பத்து லைன்ஸ் தேயிலை தோட்டத்திற்குள் 2 காட்டு யானைகள் புகுந்தன.
பின்னர் அவை திடீரென ஒன்றுக்கு ஒன்று ேமாதிக்கொண்டன. இதனால் தோட்டத்தில் பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சம் அடைந்ததோடு, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டை உடைத்தது
கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 பால்வாடி லைன்ஸ் பகுதியில் காட்டு யானை உலா வந்தது. பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதிக்குள் காட்டு யானை புகுந்தது. தொடர்ந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது. பின்னர் சிவராஜ் என்பவரது வீட்டு சமையலறை மேற்கூரையை உடைத்தது. உள்ளே இருந்த பாத்திரங்கள், பொருட்களை யானை சேதப்படுத்தியது. அப்போது சத்தம் கேட்டு பார்த்த சிவராஜ் குடும்பத்தினர் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வெளியே செல்ல முடியாமல் ஒரு அறையில் முடங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானையை விரட்டினர். இதேபோல் கோட்டப்பாடி பகுதியில் காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததுடன், வாகனங்களை வழிமறித்தன. தகவல் அறிந்த பிதிர்காடு வனக்காப்பாளர் கோபு உள்ளிட்டோர் யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.