பந்தலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்-தொழிலாளர்கள் பீதி
பந்தலூர்
பந்தலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளார்கள்.
காட்டு யானைகள்
பந்தலூர் அருகே சேரம்பாடி அரசுதேயிலைதோட்டம் ரேஞ்ச் எண் 1,2,3,4 பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் தினமும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிடுவதுடன் தொழிலாளர் களையும் துரத்தி வருகிறது. நேற்று முன்தினம் இரவும் தேயிலை தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது.
இதனால் தொழிலாளர்கள் பீதியில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர் இதேபோல் சேரங்கோடு அரசு தேயிலை தோட்ட அலுவலகத்தையும் காட்டுய ானைகள் முற்றுகையிட்டது. மரங்களையும் ஒடித்து மிதித்து சேதப்படுத்தியது.
வனத்துறையினர் கண்காணிப்பு
ஏலமன்னா சாலையின் மேல்பகுதியில் முகாமிட்ட காட்டு யாளைகள் வாகன ஓட்டிகளை விரட்டியதால் அவர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்ததும் சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் பிதிர்காடு வனவர் பெல்லிக்ஸ் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்புகாவலர்கள் அங்கு சென்று, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததோடு, சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1 டேன்டி ஆஸ்பத்திரிஅருகே புல்மேட்டில் காட்டு யானைகள் முகாமிட்டது. யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் வனத்துறையினரும் வேட்டை தடுப்பு காவலர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தேவர்சோலையில் அட்டகாசம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பகுதியில் கடந்த 6-ந் தேதி இரவு காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது. அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரை தாக்கியது. இருப்பினும் மயிரிழையில் வீட்டுக்குள் ஓடி உயிர் தப்பினர். மேலும் அவர்களை பிடிக்க ஓடிவந்த காட்டு யானை வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அதன் மேற்கூரை உடைந்து விழுந்தது.
பின்னர் பொதுமக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அதே பகுதிக்கு மீண்டும் காட்டு யானை வந்தது. அப்போது அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மாரிகன் என்பவரது காரையும், ராஜூ என்பவரது ஆட்டோவையும் காட்டு யானை சேதப்படுத்தியது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, போஸ்பாரா சங்கிலி கேட் வழியாக மாலை 6 மணிக்கு மேல் காட்டு யானை வெளியேறி ஊருக்குள் வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள அகழியை முறையாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.