மஞ்சூர் -கோவை செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாம்-வாகன ஓட்டிகள் அச்சம்

மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப் பாதையில் உள் சாலையில் முகாமிட்ட காட்டு யானை கூட்டத்தால் 1 மணிநேரம் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

Update: 2023-06-05 13:38 GMT

மஞ்சூர்

மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் கெத்தை மலைப் பாதையில் உள் சாலையில் முகாமிட்ட காட்டு யானை கூட்டத்தால் 1 மணிநேரம் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் கெத்தை மலைப்பாதை பெரும்பாலும் அடர்வனப்பகுதியை கொண்டதாக உள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதையொட்டி இந்த சாலையில் மாலை 6 மணிக்கு பிறகு வாகன நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் குடிக்க யானைக் கூட்டங்கள் செல்வதால் பிரதான சாலையாக உள்ள மலைப்பாதைகளை கடந்தும் முகாமிட்டும் உலாவுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கெத்தை மலைப்பாதையில் 5 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டன. சாலையில் உலாவிய யானைகள் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபட்டன.

வனத்துறையினர் அறிவுரை

இதனால் கோவையிலிருந்து மஞ்சூர் வந்த வாகனங்களும் மஞ்சூரிலிருந்து கோவை செல்லும் வாகனங்களும் யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்து பின்பு சென்றனர்.

இதே போல் நேற்று மதியம் ஒரு காட்டு யானை கெத்தை மின் நிலையம் அருகே சாலையில் வந்த கார்களை வழிமறித்தது. மேலும் கார்களை தாக்குவது போல் துரத்தி சென்றதால், காரில் வந்தவர்கள் காரை பின்னோக்கி நகர்த்தி தப்பித்தனர். இதன் பின்னர் சற்று நேரம் சாலையில் உலாவிய காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடனும் அதேசமயம் யானைகளுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்