50 ஏக்கர் ெநற்பயிர்களை சேதப்படுத்திய காட்டுமாடுகள்
மேலூர் அருகே வயல்களில் புகுந்து 50 ஏக்கர் நெற்பயிர்களை காட்டு மாடுகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேலூர்,
மேலூர் அருகே வயல்களில் புகுந்து 50 ஏக்கர் நெற்பயிர்களை காட்டு மாடுகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
காட்டுமாடுகள்
மேலூர் அருகே மதுரை மாவட்டத்தின் கடைசி எல்லையாகவும், சிவகங்கை மாவட்ட எல்கை பகுதியில் உள்ளது செம்மனிப்பட்டி கிராமம். இங்கு 50-க்கும் மேற்பட்ட நிலங்களில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான காட்டு மாடுகள் கூட்டமாக இரவில் படையெடுத்து செம்மனிப்பட்டிக்கு வந்தன. பின்னர் அவைகள் அப்பகுதிகளில் இருந்த வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்திவிட்டு சென்றன. காலையில் வயல்களுக்கு வந்த விவசாயிகள் காட்டுமாடுகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயி பொன்கார்த்திக் கூறியதாவது:- எங்கள் கிராமத்தில் பருவமழை காலத்தில் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்தோம். ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நெற் பயிர்கள் நன்றாக விளைந்து இருந்தன. இதனால் மகிழ்ச்சியுடன் இருந்தோம்.
விவசாயிகள் கவலை
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து இரவில் வந்த நூற்றுக்கணக்கான காட்டு மாடுகள் எங்களது விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை தின்று அழித்து விட்டது. இது எங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது.
எனவே, அரசு அறிவித்தபடி நெற்பயிர்களை காப்பீடு செய்துள்ள எங்களுக்கு காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காட்டுமாடுகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.