கரும்பு பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள்
தெள்ளாரில் கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வந்தவாசி
தெள்ளாரில் கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
காட்டுப்பன்றிகள்
வந்தவாசியை அடுத்த தெள்ளார், டி.மாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, மணிலா, நெல் ஆகிய பயிர்களை வைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெள்ளார் பகுதியில் தீபநாதன், செல்லியம்மாள், மணிகண்டன், அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளின் நிலத்தில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து கரும்பு பயிர்களை சாப்பிட்டு விட்டு நாசம் செய்து செல்கின்றன.
காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைநிலங்களில் இறங்கி சாப்பிடுவதை விவசாயிகளால் தடுக்க முடியாது.
இதுகுறித்து வேளாண் அலுவலர்களுக்கு தகவல் கூறினால் அவர்கள் வந்து பார்த்து விட்டு எந்த வித பதிலும் கூறாமல் சென்று விடுவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நஷ்டம்
காட்டுப்பன்றிகள் வனவிலங்கு பட்டியலில் இருப்பதால் அதை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயத்தை முற்றிலுமாக துறக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மிச்சம் மீதி உள்ள விவசாயிகளை காப்பாற்ற முடியும். பயிர்களை நாசம் செய்வதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.